அகிம்சையை உலகத்துக்கே கற்பித்தவர் பாகுபலி மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு

அகிம்சையை உலகத்துக்கே பாகுபலி தான் கற்பித்தார் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

Update: 2018-02-25 23:54 GMT
ஹாசன்,

அகிம்சையை உலகத்துக்கே பாகுபலி தான் கற்பித்தார் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலாவில் உலக புகழ்பெற்ற கோமதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா மஸ்தகாபிஷேகம் நடந்து வருகிறது. நேற்று நடந்த விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சரவணபெலகோலாவுக்கு மதியம் 2 மணிக்கு வந்தார். கோமதேஸ்வரர் கோவிலில் விந்தியகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாவுண்டராயா மகா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அந்த மண்டபத்தில் இருந்த வெள்ளியால் ஆன பாகுபலி சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் அவர் அங்கு பேசியதாவது:-

தியாகத்துக்கு பெயர் போனவர் பகவான் பாகுபலி தான். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா மஸ்தகாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயின் மக்களின் காசியாக சரவணபெலகோலா விளங்குகிறது. அகிம்சையை உலகத்திற்கே கற்பித்தவர் பகவான் பாகுபலி தான். பாகுபலியின் கொள்கைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கும். தேசிய அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய கோவில்களில் கோமதேஸ்வரர் கோவிலும் ஒன்று.

இதனை பாதுகாக்க மத்திய அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அமைதியின் உருவமாக இருக்கும் பாகுபலியை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசையாக தான் உள்ளது. கூடிய விரைவில் மீண்டும் இங்கு வந்து, மலை மேல் உள்ள பாகுபலியை தரிசனம் செய்வேன்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அனந்தகுமார், சாருகீர்த்தி பட்டாரக்க சுவாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மகா மஸ்தகாபிஷேக விழா நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 7-ந்தேதி தொடங்கிய இந்த விழா இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. கடந்த 17-ந்தேதி முதல் பாகுபலிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்து வந்தது. நேற்று காலையும் வழக்கம்போல, பால், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்களும், 1,008 கலச அபிஷேகமும் நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்த அபிஷேகங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இன்று பகவான் பாகுபலிக்கு சிறப்பு பூஜைகளும், யாகத்துடன் மகா மஸ்தகாபிஷேக விழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்