பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி சாடல்

மோடி ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முன்வரவில்லை என ராகுல் காந்தி சாடல்.

Update: 2018-02-26 00:04 GMT
பாகல்கோட்டை,

பணக்காரர்கள் வாங்கிய ரூ.1.40 லட்சம் கோடி கடனை ரத்து செய்த பிரதமர் மோடி ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முன்வரவில்லை என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் 2-வது கட்ட பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் கர்நாடகத்திற்கு வந்தார். பெலகாவி மாவட்டத்தில் முதல் நாள் பயணத்தை தொடங்கிய அவர், நேற்று 2-வது நாளாக பாகல்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி கூட்டங்களில் பங்கேற்று பேசினார். பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகாவில் உள்ள சிக்கபடலகி கிராமத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மக்கள் ஆசி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

12-வது நூற்றாண்டிலேயே சமூக புரட்சியாளர் பசவண்ணர் தனது அனுபவ மண்டபத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சபையை அதாவது பாராளுமன்றத்தை அமைத்தார். நமது அரசியல் சாசனமும் அவருடைய விருப்பங்களை கொண்டுள்ளது. சொன்னபடி நடக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி பசவண்ணரின் கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள பணக்காரர்களுக்கு ஆதரவாக மோடி செயல்படுகிறார்.

ஆதிவாசி மக்களை அவர் முழுமையாக புறக்கணிக்கிறார். ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டபோது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வங்கி வாசலில் நீண்ட வரிசையில் நின்று டெபாசிட் செய்தனர். ஆனால் அந்த பணத்தை லலித்மோடி, நிரவ்மோடி ஆகியோர் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டனர். பணக்காரர்கள் வாங்கிய வங்கி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். அதாவது பணக்காரர்களின் கடனை ரூ.1.40 லட்சம் கோடி வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

ஆனால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி முன்வரவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக மோடி கூறினார். ஆனால் சொன்னபடி வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மோடி தோல்வி அடைந்துவிட்டார். ஆனால் கர்நாடக அரசு சொன்னபடி நடந்து கொண்டுள்ளது. கர்நாடகத்தில் நீர்ப்பாசனத்துறைக்கு மட்டும் ரூ.55 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

ஏழை மக்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு மாதம் 7 கிலோ அரிசியை கர்நாடக அரசு வழங்குகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்கிறது. சாதி, மதம், செல்வாக்கு பார்க்காமல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை கர்நாடக அரசு செய்து வருகிறது. கர்நாடக விவசாயிகளின் கடன் ரூ.8,100 கோடியை காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. தலித், பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம் கோடி நிதியை கர்நாடக அரசு ஒதுக்குகிறது. ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒட்டுமொத்தமாக நாட்டில் உள்ள தலித், பழங்குடியின மக்களுக்கு ரூ.55 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

குஜராத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. அங்கு சுகாதாரம், கல்வி வசதிகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. உயர்கல்வி பயில ரூ.15 லட்சம் வரை செலவாகிறது. மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை இலவசமாக வழங்குகிறது.

குஜராத்தில் ஒரே தொழில் அதிபருக்கு 45 ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா பணக்காரர்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுகிறது. இதுதான் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் செய்த பணிகளையும் கூட தான் செய்ததாக மோடி சொல்கிறார்.

நாட்டை கட்டமைக்கும் பணியில் மத்திய அரசுடன் நாங்கள் கைகோர்த்து செயல்பட தயார். ஆனால் எல்லா பணிகளையும் தானே செய்ததாக மோடி கூறுவது தவறு. சிக்கபடசலு பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து அணையை கட்டியுள்ளனர். இது பாராட்டத்தக்கது ஆகும். பிரதமர் மோடி கர்நாடகம் வரும்போது ஊழல் ஒழிப்பு பற்றி பெரிதாக பேசுகிறார்.

ஆனால் அதே ஊழல் வழக்குகளில் சிறைக்கு சென்று வந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் முன்னாள் மந்திரிகளை அருகில் உட்கார வைத்துக்கொண்டு இவ்வாறு பேசுகிறார். இதை கர்நாடக மக்கள் ஏற்க மாட்டார்கள். நாட்டை காக்கும் காவலராக இருப்பதாக மோடி கூறுகிறார்.

ஆனால் வங்கிகளில் பணக்காரர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கடன் வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் சொத்து குறுகிய காலத்தில் பல மடங்கு உயர்ந்துவிட்டது. இது மோடியின் கண்களுக்கு தெரியவில்லையா?. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

அதைத்தொடர்ந்து ராகுல் காந்தி அதே மாவட்டத்தில் உள்ள முதோல் நகரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், “பசவண்ணரின் கொள்கைகளை கர்நாடக காங்கிரஸ் அரசு நிறைவேற்றி வருகிறது. நிரவ்மோடி வங்கியில் ரூ.11 ஆயிரத்து 700 கோடி கடனை பெற்று திரும்ப செலுத்தாமல் தப்பி சென்றுவிட்டார். அவர் எப்படி வெளிநாட்டுக்கு சென்றார்?. மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?“ என்றார்.

இதில் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்