ஊழலை ஒழிப்பதாக பேசுகிறீர்கள் லோக்பால் அமைக்காதது ஏன்? பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி

ஊழலை ஒழிப்பதாக பேசும் நீங்கள் லோக்பால் அமைப்பை இன்னும் அமைக்காதது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2018-02-27 00:00 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2-வது கட்ட பிரசார சுற்றுப்பயணமாக கடந்த 24-ந் தேதி கர்நாடகம் வந்தார்.

அவர் மும்பை-கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்தார். பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டினார். கடைசி நாளான நேற்று ராகுல் காந்தி பாகல்கோட்டையில் இருந்து புறப்பட்டு பெலகாவி மாவட்டத்திற்கு சென்று ராமதுர்காவில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நிரவ்மோடி ரூ.17 ஆயிரத்து 700 கோடியை கடன் பெற்று மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்டார். இது ஏழை மக்களின் பணம் ஆகும். அதுபற்றி நாட்டை பாதுகாப்பதாக சொல்லும் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. அவர் பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது லோக் அயுக்தாவை அமைக்கவில்லை.

மோடி பிரதமராக பதவி ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் ஊழலை ஒழிப்பதாக பேசும் பிரதமர் மோடி, லோக்பால் அமைப்பை இன்னும் அமைக்காதது ஏன்?. மோடி தன்னை இந்த நாட்டின் பாதுகாவலர் என்று சொல்கிறார். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் நிறுவனத்தின் சொத்துகள் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. இது எப்படி சாத்தியமானது?. இதுபற்றியும் மோடி பேசவில்லை.

ஊழல் வழக்குகளில் சிறைக்கு சென்று வந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் முன்னாள் மந்திரிகளை அருகில் அமர வைத்துக்கொண்டு மோடி கர்நாடகத்தில் ஊழல் ஒழிப்பு பற்றி பேசுகிறார். இதை மக்கள் ஏற்கமாட்டார்கள். மோடி அவர்களே, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன்படி நடந்து கொள்ளுங்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். வெறும் பேச்சால் எந்த பயனும் இல்லை.

கர்நாடகத்தில் 12-வது நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணரின் கொள்கைகளை மோடி பின்பற்றி நடக்க வேண்டும். மோடி அவர்களே, வெறும் பேச்சுகளை மட்டுமே பேச மக்கள் உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கவில்லை. சரக்கு-சேவை வரி மூலம் மோடி மக்கள் மீது அதிக வரிச்சுமையை ஏற்படுத்தியுள்ளார். இது ‘கப்பர்சிங்‘ வரி. சாமானிய மக்களின் பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது.

லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்துவிட்டனர். ஆனால் ஒருவருடைய (பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா) சொத்து மட்டும் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.80 கோடியாக அதிகரித்துவிட்டது. இதுபற்றியும் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் கூறினார். ஆனால் அதன்படி வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மோடி முன்வரவில்லை. சித்தராமையாவிடம் இருந்து மோடி கற்றுக்கொள்ள வேண்டும். நிரவ்மோடி போன்றவர்களுக்கு தான் மோடி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வழங்குகிறார்.

கர்நாடகத்தில் ஏழை மக்களுக்கு மாதம் தலா 7 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. பணம், ஆட்சி அதிகாரம் மற்றும் ஊடகங்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு உள்ளது. அவ்வாறு இருந்தாலும், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. ஏனென்றால் கர்நாடகத்தில் ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஏழை, நலிவடைந்த மக்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். கர்நாடகத்தின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வோம்.

மேலும் செய்திகள்