5 நாள் போலீஸ் காவல் முடிந்து மாவோயிஸ்டுகள் 3 பேரும் மீண்டும் சிறையில் அடைப்பு

5 நாள் போலீஸ் காவல் முடிந்து மாவோயிஸ்டுகள் 3 பேரும் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை அடுத்த மாதம் 23-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2018-02-26 23:15 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பூண்டி புல்லரம்பாக்கம் பகுதியில் கடந்த 10-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், ஆட்டோவில் வந்த மாவோயிஸ்டு தம்பதிகளான தசரதன்(வயது 32), அவருடைய மனைவி செண்பகவல்லி என்ற கனிமொழி(28) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இவர்கள், ஒதப்பையில் உள்ள தசரதனின் சகோதரர் வெற்றி வீரபாண்டியன்(40) என்பவர் வீட்டுக்கு ஆட்டோவில் வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் பூண்டி பகுதியில் தங்கள் இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்க திட்டமிட்டதும் தெரிந்தது. பின்னர் கைதான 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் கைதான மாவோயிஸ்டுகள் 3 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய மாவட்ட நீதிபதி, 26-ந்தேதி அவர்களை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். தசரதன் புதுக்கோட்டையில் பெயிண்டராகவும், செண்பகவல்லி செவிலியரின் உதவியாளராகவும் பணிபுரிந்து வந்ததால் போலீசார் 3 பேரையும் புதுக்கோட்டை அழைத்துச்சென்று விசாரித்தனர். அங்கு அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்தநிலையில் 5 நாள் போலீஸ் காவல் முடிந்து நேற்று மாலை மீண்டும் மாவோயிஸ்டுகள் 3 பேரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து 3 பேரையும் அடுத்த மாதம்(மார்ச்) 22-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படியும், 23-ந்தேதி மீண்டும் அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து 3 மாவோயிஸ்டுகளையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்