வட்டார வளர்ச்சி அதிகாரியின் கார் மோதல்: மாணவன் உள்பட 2 பேர் பலி

குடிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வட்டார வளர்ச்சி அதிகாரியின் கார் மோதிய விபத்தில் மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2018-03-09 00:00 GMT
குடிமங்கலம்,

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் மகேந்திர பூபதி (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இவனுடைய நண்பன் அதே ஊரைச்சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரது மகன் விஷ்ணு செல்வம் (13). இவன் அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இவர்கள் 2 பேரும் தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வந்தனர்.

இந்த நிலையில் மாணவர்கள் 2 பேரும் நேற்று காலையில் பள்ளிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு குப்பம்பாளையம் பஸ் நிறுத்தத்திற்கு சென்றனர். பின்னர் பஸ்சுக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில், மாணவன் மகேந்திரபூபதியின் உறவினராக விவசாயி சுந்தர்ராஜ் (45) வந்தார். அவர் அந்த மாணவர்களை பார்த்ததும், “நீங்கள் படிக்கும் பள்ளி வழியாக செல்கிறேன். எனவே என்னுடன் வாருங்கள். உங்களை பள்ளியில் இறக்கி விட்டு செல்கிறேன்” என்றார்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி சுந்தர்ராஜ் சென்று கொண்டிருந்தார்.

அம்மாபட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த காரில் உடுமலை வட்டார வளர்ச்சி அதிகாரி ரமேஷ்குமார் இருந்தார். அந்த காரை மடத்துக்குளத்தை சேர்ந்த டிரைவர் காளிமுத்து (55) ஓட்டினார். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வட்டார வளர்ச்சி அதிகாரி ரமேஷ்குமார் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

கண் இமைக்கும் நேரத்தில் சுந்தர்ராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது, வட்டார வளர்ச்சி அதிகாரி வந்த கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற சுந்தர்ராஜ் மற்றும் மோட்டார்சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவர்கள் மகேந்திரபூபதி மற்றும் விஷ்ணு செல்வம் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே மகேந்திரபூபதி பலியானான். இதையடுத்து சுந்தர்ராஜ் மற்றும் விஷ்ணுசெல்வத்திற்கு முதல் உதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தர்ராஜ் இறந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் விஷ்ணு செல்வத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் மாணவன் மற்றும் விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்