மாவட்டம் முழுவதும் தலைவர்களின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தலைவர்களின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2018-03-08 22:30 GMT
திண்டுக்கல்,

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நிறுவப்பட்டிருந்த சோவியத் ரஷ்யாவின் மறைந்த தலைவர் விளாடிமிர் லெனின் சிலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனால், அந்த மாநிலத்தில் மார்க்சிஸ்ட்- பா.ஜனதா தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில், கடந்த 6-ந்தேதி வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது.

இதனை கண்டித்து திராவிடர் கழகம், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம், உருவபொம்மை எரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தில் சில இடங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை, மெயின்ரோட்டில் உள்ள காமராஜர், பெரியார், அண்ணா சிலை, திருச்சி சாலையில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைகளுக்கும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்.

மேலும், மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் உள்ள தலைவர்களின் சிலை மற்றும் சமத்துவபுரங்களில் உள்ள பெரியாரின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, பதற்றமான இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்