தேசிய ஊட்டச்சத்து குழுமம் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து குழுமம் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Update: 2018-03-08 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் மத்தியஅரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலஅமைச்சகத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து குழுமத்தை டெல்லியிலிருந்து முதல் கட்டமாக காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், அரியலூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் தேசிய ஊட்டச்சத்து குழுமம் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பங்கேற்றார். இந்த தேசிய ஊட்டச்சத்து குழுமம் குறிப்பாக தாயின் கர்ப்ப காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் என குழந்தைகளின் முதல் 1000 நாட்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்துவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மேலும் குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டில் கவனம் செலுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு குழந்தை பாதுகாப்பு நடவடிக்கைகளை தேசிய ஊட்டச்சத்து குழுமம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமாசந்த்காந்தி, தேசியதகவல் மைய அலுவலர் ஜான்பிரிட்டோ, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) பூங்கோதை, மாவட்ட சமூகநல அலுவலர் பூங்குழலி, மாவட்ட திட்ட அலுவலர் ஜெயராணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்