மகளிருக்கான தொற்றாநோய் கண்டறியும் பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது

மகளிருக்கான தொற்றாநோய் கண்டறியும் பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

Update: 2018-03-08 22:45 GMT
பெரம்பலூர்,

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தூய்மை மகளிர் வாரத்தை முன்னிட்டு நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மகளிருக்கான தொற்றாநோய் கண்டறியும் சுகாதாரம் சார்ந்த பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. ஊரக பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுவினர், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களில் 81 நபர்களுக்கு தொற்றா நோய்களை கண்டறிவது குறித்து முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

தனிநபர் இல்ல கழிவறைகளை...

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

சுகாதாரமாக இருந்தாலே நோய்கள் நம்மை அண்டாது. கிராமப்புறங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தனிநபர் இல்லக் கழிவறைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகின்றன. உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் ஊருக்கு வந்து செல்லும் நபர்களுக்கும் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திறந்தவெளியில் மலம் கழிக்கும் பகுதியில் காலில் செருப்பு அணியாமல் செல்வதின் மூலம் மலத்திலிருந்து உருவாகும் கொக்கிப்புழுக்கள் மனிதர்களின் கால்களின் வழியே உடலுக்குள் சென்றுவிடும். அந்தப்புழுக்கள் உடலுக்குள் ரத்தத்தை உறிஞ்சி வளர்வதால் ரத்தசோகை நோய் ஏற்படும்.

இந்த விளக்கத்தை பெண்களாகிய நீங்கள் உங்கள் ஊர் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் ரத்தசோகை கண்டறியப்படும் நபர்களின் இல்லத்தில் கழிவறைகள் இருக்கின்றதா என்ற தகவல்களும் சுகாதாரத்துறையின் மூலம் சேகரிக்கப்பட வேண்டும்.

கலெக்டருக்கு மகளிர் தின வாழ்த்து

இன்று (நேற்று) உலக மகளிர் தினம் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் என்று குறிப்பிட்டு அனைவரும் மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்தார்கள். ஆனால், முதல் பெண் கலெக்டர் என்பதை விட இம்மாவட்டத்தில் உள்ள பெண்கள் ஆரோக்கிய மாணவர்களாகவும், பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்களாகவும், தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். எனவே, கிராமப்பகுதிகளில் உள்ள அனைவரது இல்லங்களிலும் தனிநபர் இல்ல கழிவறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

அதனை தொடர்ந்து ஸ்கோப் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் சுப்புராமன், சுகாதாரம் சார்ந்த பயிற்சியினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) சம்பத், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன், மாவட்ட ஊராட்சி செயலர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்