2 மாதமாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

திருப்பரங்குன்றம் அருகே 2 மாதத்திற்கு மேலாக குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2018-03-08 22:45 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் தனக்கன்குளம் ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட விஸ்தரிப்பு பகுதியாக வெங்கல மூர்த்தி நகர் உள்ளது. இங்கு நலிந்த நாடக நடிகர்கள் உள்பட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 2 ஆழ்துளை கிணறுகள், 2 குடிநீர் தொட்டிகள், 3 அடி பம்புகள் அமைக்கப்பட்ட போதிலும் குழாய்களில் தண்ணீர் வரவில்லை.

இதனால் கடந்த 2 மாதத்திற்கு மேலாக இந்த பகுதியில் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் குடிநீருக்காக பெண்கள் காலி குடங்களுடன் அங்கும் இங்குமாக அலை மோதி தவித்து வரும் அவர்கள், வேறு வழியின்றி ஒரு குடம் தண்ணீர் ரூ.5, ரூ.10 என விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை வெங்கலமூர்த்தி நகரை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு வந்து, தங்கள் பகுதியில் குடிநீர் கிடைக்காமல் கடந்த 2 மாதத்திற்கு மேலாக அவதிப்படுகிறோம் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். அப்போது பெண்கள் கூறும் போது, தனக்கன்குளம் கீழக்குயில்குடி பிரிவு சந்திப்பு வரை வரக்கூடிய காவிரி கூட்டு குடிநீர் குழாயை வெங்கலமூர்த்தி நகர் பகுதிக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தனக்கன்குளம் ஊராட்சி செயலர் ரவி கிருஷ்ணன் கூறும் போது, வெங்கலமூர்த்தி நகர் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாததால் 900 அடி ஆழத்திற்கு ஆழ்துளை போடப்பட்ட போதிலும் தண்ணீர் கிடைக்கவில்லை. புதியதாக ஆழ்துளை கிணறு அமைக்க ஊராட்சியில் நிதி இல்லை. ஆகவே ஊராட்சி ஒன்றிய பொது நிதிமூலம் ரூ.5 லட்சத்திற்கு ஆழ் துளை அமைக்குமாறு ஆணையாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்