நெல்லை அருகே: லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயர் பலி உருக்கமான தகவல்கள்

நெல்லை அருகே, லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் பரிதாபமாக பலியானார்.

Update: 2018-03-09 20:45 GMT
நெல்லை,

நெல்லை அருகே, லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் பரிதாபமாக பலியானார். அவர் வேலை கிடைத்த சந்தோ‌ஷத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள சென்றபோது விபத்தில் சிக்கியதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

என்ஜினீயர்

நெல்லை அருகே உள்ள தாழையூத்து இந்திராநகரை சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் ராமானுஜம்(வயது20). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் வேலைக்காக பல்வேறு இடங்களில் முயற்சி செய்து வந்தார்.

இந்த நிலையில், இவருக்கு சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து உள்ளது. அதற்கான தகவல் நேற்று அவருக்கு கிடைத்தது. இதை வீட்டில் பெற்றோரிடம் தெரிவித்த அவர் மிகவும் சந்தோ‌ஷமாக காணப்பட்டார். பின்னர், தனக்கு வேலை கிடைத்த தகவலை நண்பர்களிடம் தெரிவிப்பதற்காக அவர், நேற்று காலையில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

ஆஸ்பத்திரியில் சாவு

 தாழையூத்து மெயின்ரோட்டில் அவர் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

டிரைவர் கைது

இந்த தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஆஸ்பத்திரிக்கு சென்று அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பாளையங்கோட்டை புதுக்குளத்தை சேர்ந்த முருகேசனை கைது செய்தனர்.

வேலை கிடைத்த சந்தோ‌ஷத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள சென்றபோது விபத்தில் சிக்கி என்ஜினீயர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்