அறிவியலில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய அதிசய விஞ்ஞானி

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தமது கண்டுபிடிப்பில் ஆற்றலுக்கும் பொருளுக்கும் இடையிலான தொடர்பினை ஒளிவேகத்தினால் சமன்படுத்தினார்.

Update: 2018-03-15 06:00 GMT
ஹாக்கிங், அத்துடன் குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆகிய ஆற்றல்கட்டு விசையியல் கொள்கையையும் இணைத்து 1973-ம் ஆண்டவாக்கில் புதிய தத்துவத்தை வரையறுத்தார். ‘ஆற்றல்கட்டு நிறையீர்ப்பு’ மற்றும் ‘ஆற்றல்கட்டுக் கொள்கை’ ஆகிய புதுப்புது கோட்பாட்டியல் பிரிவுகளில் தமது சிந்தனைத் திறனை வெளிப்படுத்தினார்.

இவர் எழுதிய ‘ய ப்ரீப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற நூல் ஆங்கிலத்தில் 237 வாரங்களாக அதிகபட்ச விற்பனைப் பட்டியலில் இடம்பெற்றது என்றால் பாருங்களேன். தமிழில் இந்நூல் ‘காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற தலைப்பில் சென்னை உலகத்தமிழ் அறக்கட்டளை சார்பில் 18-12-2003 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் நானும் கலந்துகொண்டேன்.

உலக அளவில் கோட்பாட்டியல் இயற்பியலர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கோட்பாட்டியல் பிரபஞ்சவியல் மையத்தில் இயக்குனராகப் பணியாற்றியவர். கருந்துளை விண்மீன்களை கண்டுபிடித்த இந்திய நோபல் விஞ்ஞானி சந்திரசேகர சுப்பிரமணியம் போலவே, 1974-ம் ஆண்டு அந்தக் கருந்துளையில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினைக் கண்டுபிடித்து அறிவித்தவர் ஹாக்கிங். அந்தக் கதிர்வீச்சிற்கு ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ என்றே பெயர். அண்ட இழைக் கொள்கை (ஸ்ட்ரிங் தியேரி) என்கிற அதிநவீனச் சித்தாந்தங்களை வகுத்தார்.

1993-ம் ஆண்டு ‘கருந்துளை விண்மீன்களும், சில மழலைப் பிரபஞ்சங்களும் மற்றும் சில கட்டுரைகள்’ என்ற நூலை வெளியிட்டார். இவரது இளமைப் பருவத்தைப் பற்றி நிச்சயம் நம் இளந்தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டும். 1942-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதி இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் பிராங்-சபெல்.

சில காலம் லண்டனில் வசித்துவந்தபோது, அந்நாளில் இரண்டாம் உலகப்போரின் விளைவாக, லண்டன் குண்டுவீச்சுக்கு உள்ளானது. அதனால் ஆக்ஸ்போர்டிற்கு இடம்பெயர்ந்த தாயார் இசபெல் அங்குதான் ஸ்டீபன் ஹாக்கிங்கை ஈன்றெடுத்தார்.

ஹாக்கிங் தமது 13-வது வயதில் காய்ச்சல் காரணமாக, உயர்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு எழுத இயலாமல் போனது. அதனால் வீட்டில் அடைபட்டு கிடந்த ஹாக்கிங், தனது நண்பர்களுடன் வெடிமருந்து தயாரிப்பு, விமானங்கள் வடிவமைப்பு, புலனறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வுமுறைகள் போன்ற பல வித்தியாசமான துறைகளை விளையாட்டாகப் பயின்றார்.

16-வது வயதிலேயே ‘திக்ரான் தஹ்தா’ என்கிற கணித ஆசிரியர் உதவியினால் சாதாரணக் கடிகாரங்களின் உதிரிப்பாகங்களையும், சில துக்கடாக்களையும் பழைய தொலைபேசி இயக்கிப் பலகையில் பொருத்தி ஒரு கணிப்பொறியினை உருவாக்கினார் என்றால் ஆச்சரியம்தான்.

பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் அவருக்கு இட்ட செல்லப்பெயர் ‘ஐன்ஸ்டீன்’. ஆனால் அவர் சராசரி பள்ளிப்பாடங்களில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. தனது கணித ஆசிரியரின் தூண்டுதலால் அறிவியல் பிரிவுகளில் அதிக நாட்டம் கொண்டார்.

1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் சேர்ந்தார். முதல் ஒன்றரை ஆண்டுகள் இவருக்குக் கணிதம், இயற்பியல், வேதியியல் எல்லாமே ‘ப்பூ இவ்வளவு தானா’ என்று ஏளனம் செய்கிற வகையில் அத்தனை எளிதாக அமைந்தனவாம். இன்னது செய்யவேண்டும் என்று சொன்னால் போதும். அதை அடுத்தக் கணமே செய்து முடித்துவிடுவாராம். மற்றவர்களைப் போல, பிறர் எப்படிச் செய்கிறார்கள் அல்லது எவ்விதம் செய்யவேண்டும் என்று எல்லாம் தலையைப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார் என்று சிலாகிக்கிறார் அவரது ஆசிரியர்களில் ஒருவரான ராபர்ட் பெர்மன்.



ஹாக்கிங் பொதுவாகவே, ஒரு சோம்பேறி மாணவர் போலவே அமைதியாக்க காணப்படுவாராம். ஆனாலும், எதையும் செய்யச் சொன்னால் எனக்கு முதல் விருது தருவீர்கள் என்றால் செய்கிறேன் என்பாராம். எதனையும் மன உறுதியுடன் பேசுவாராம். இரண்டாவது இடம் என்றால் நான் அதைச் செய்ய வர மாட்டேன் என்ற திடமான கொள்கைப் பிடிப்பு உடையவர் ஹாக்கிங்.

1962-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் நகரில் ட்ரினிட்டி ஹால் என்ற கல்லூரியில் முனைவர் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கு விண்கோட்பாட்டியல் துறையில் மிகவும் பிரபலமான பிரெட் ஹாய்ல் என்பவருக்குப் பதிலாக, டென்னிஸ் வில்லியம் சியாமா என்பவரே இவரது ஆய்வு நெறிகாட்டி ஆனதால் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தார்.

இதற்கிடையில், ஐன்ஸ்டீனின் பொதுச்சார்பியல் சித்தாந்தம் மற்றும் பிரபஞ்சவியல் பயிற்சிக்குத் தனது கணித ஞானம் போதாது என்று உணர்ந்தார். ஆனால், இந்தக் காலகட்டத்தில்தான் அவருக்கு இயக்க நரம்புப் பாதிப்பு நோய் பீடித்தது. ஊன்றுகோல் துணையின்றி நடக்கவும் இயலாத நிலை. பேச்சு குளறியது. கேட்பவருக்குப் புரியும்படி இல்லை. எதிலும் மனம் தளராமல் தமது ஆய்வுகளை தொடர்ந்தார். குரல்வளை வழி அன்றி, கன்னத்தின் தசையினை அசைத்தே பேசும் கருவியைப் பயன்படுத்தி உரையாடினார்.

1964-ம் ஆண்டு இவர் தமது ஆதர்ச ஆசானாகிய பிரெட் ஹாய்ல் மற்றும் தமது இந்திய மாணவரான ஜயந்த் நர்லிக்கர் ஆகியோர் வியக்கும் வண்ணம் சில கணிதவியல் சவால்கள் வெளியிட்டுப் புகழ்பெற்றார். இவர் தமது 76-வது வயதில் இன்று (அதாவது நேற்று) காலமானார். இந்த அதிசய விஞ்ஞானியின் வாழ்வு என்பது உலக அறிவியல் கோட்பாட்டியல் சிந்தனைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

- நெல்லை சு.முத்து

மேலும் செய்திகள்