வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை

வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-03-18 22:15 GMT
வேலூர், 

வேலூர் சேண்பாக்கம் வேந்தர் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன். ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டரான இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய மனைவி சாரதா (வயது 50). இவர்களுக்கு பால்ராஜ் (26), நவீன்குமார் (24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

நவீன்குமார் பி.டெக். என்ஜினீயரிங் படித்து விட்டு ராணுவத்தில் சேருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். தினமும் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். இந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் வேலைக்கு சென்றுள்ளார். நவீன்குமார் ஈரோட்டில் உள்ள உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் சில மாதங்கள் பணிபுரிந்துள்ளார்.

வேலைப்பளு காரணமாக உடலை பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நவீன்குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்புவேலையை விட்டு விட்டார். பின்னர் வேலூருக்கு வந்த அவர், தினமும் காலை வீட்டில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு வேலூர் கோட்டை மைதானம் மற்றும் சேண்பாக்கம் மேம்பாலம் பகுதியில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். மேலும் ராணுவத்தில் சேருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நவீன்குமார் நேற்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்ய வீட்டில் இருந்து சைக்கிளில் புறப்பட்டார். சிறிதுநேரத்தில் அவர் சேண்பாக்கம் மேம்பாலத்தின் அடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த நவீன்குமார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடலை பார்வையிட்டு கதறி அழுதனர்.

வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நவீன்குமார் உடலை பார்வையிட்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நவீன்குமார், சேண்பாக்கம் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ரெயில்வே மேம்பாலத்தில் நவீன்குமாரின் சைக்கிள் மற்றும் காலணிகள் இருந்தன.

இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமார் ராணுவத்தில் சேர முடியாததால் விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து என்ஜினீயர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்