பழனி அருகே, சீருடை அணிந்தபடி நண்பருடன் காரில் அமர்ந்து மது அருந்திய பெண் போலீஸ் ஏட்டு

பழனி அருகே சீருடை அணிந்தபடி நண்பருடன் காரில் அமர்ந்து பெண் போலீஸ் ஏட்டு ஒருவர் மது அருந்தும் காட்சி ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-03 00:00 GMT
நெய்க்காரப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களின் செல்போனுக்கு ‘வாட்ஸ்-அப்பில்’ நேற்று ஒரு வீடியோ காட்சி வந்தது. அதில், பெண் போலீஸ் ஏட்டு ஒருவர் சீருடை அணிந்த நிலையில் தனது நண்பருடன் காருக்குள் அமர்ந்து மதுபானம் அருந்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஒரு நிமிடம் 7 நொடிகள் அந்த வீடியோ காட்சி இருந்தது.

சிறிது நேரத்தில் அந்த வீடியோ காட்சி ‘வாட்ஸ்-அப்’, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே போலீஸ் வட்டாரத்திலும் இந்த வீடியோ வைரலாக பரவியது. விசாரணையில் அவர் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

இதுகுறித்து பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன் அந்த ஏட்டிடம் விசாரணை நடத்தினார். அவர் கூறும்போது, ‘வாட்ஸ்- அப்’பில் பரவிய வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட பெண் ஏட்டிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணை குறித்த அறிக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவர் பரிந்துரையின்படி அந்த பெண் ஏட்டு மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் கேட்டபோது, ‘சீருடையில் மது அருந்தியவர் பழனி சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் ஜெய்னுப் நிஷா என்பது தெரியவந்தது. அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’, என்றார். 

மேலும் செய்திகள்