வடபழனியில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த 2 பேர் கைது

வடபழனியில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 45 பவுன் தங்க நாணயங்கள், நகைகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2018-04-16 23:00 GMT
கோயம்பேடு,

சென்னை வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும், கோவில் திருவிழாக்களின் போது கூட்டத்தோடு கூட்டமாய் நுழைந்து பெண்களிடம் நகை பறிக்கும் சம்வங்களும் அடிக்கடி நடந்து வந்தது.

இதனால், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார் தொடர் சோதனை நடத்தி வந்தார்கள்.

இந்தநிலையில், வடபழனி ஆற்காடு சாலை மற்றும் துரைசாமி சாலை சந்திப்பில், நேற்றுமுன்தினம் நடந்து சென்று கொண்டிருந்த, மணி(வயது 59) என்பவரிடம் 2 பேர் கத்தியை காட்டி வழிப்பறி செய்ய முயன்றனர்.

அப்போது அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வடபழனி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் மாதாகோவில் தெரு நெற்குன்றத்தை சேர்ந்த அப்பு என்ற இளவரசன் (32), கங்கையம்மன் கோவில் தெரு வடபழனியை சேர்ந்த சந்தோஷ் என்ற ராஜா (19) என்பதும், ஏற்கனவே அவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்பட ஏராளமான வழக்குகள் இருப்பதும் பூட்டிய வீடுகளில் புகுந்து கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து, 45 பவுன் தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்