பெங்களூருவில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை சுற்றி 144 தடை உத்தரவு

பெங்களூருவில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் கமிஷனர் சுனில்குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-04-16 22:15 GMT
பெங்களூரு,

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை(அதாவது இன்று) தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் தங்களுடன் அதிகப்படியான ஆதரவாளர்களை அழைத்து வந்தால், வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் அதிகப்படியானோர் கூடுவதை சில சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தவும், பொதுமக்களின் மற்றும் அரசின் சொத்துக்களை சேதம் அடைய செய்யலாம் என்றும், பொதுமக்களின் அமைதியை கெடுக்க திட்டமிடலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மற்றும் பெங்களூரு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

பெங்களூரு நகரில் உள்ள மாநகராட்சி அலுவலகம், 8 மண்டல அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் வேட்பு மனுக்களை அரசியல் கட்சியினர் தாக்கல் செய்யலாம். இந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகங்களை சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 17-ந் தேதி (இன்று) காலை 10 மணியில் இருந்து வருகிற 24-ந் தேதி மாலை 6 மணி வரை இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

அந்த சந்தர்ப்பத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை சுற்றி போராட்டம், சாலை மறியலில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை. மேலும், 5 பேருக்கு மேல் கூடுவது, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து செல்லவும் அனுமதி இல்லை. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்