பிளஸ்-1 மாணவி கொலை: கைதான வாலிபர் பரபரப்பு தகவல்

ஆற்காடு அருகே பிளஸ்-1 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-04-18 22:33 GMT
ஆற்காடு,

போலீசாரிடம் கூறுகையில், கர்ப்பமாக இருப்பதாக கூறி திருமணத்துக்கு வற்புறுத்தியதால் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன் என தெரிவித்து உள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த தாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் டீக்காராமன். இவரது மகள் சங்கீதா (வயது 16) தாய் ராதாவுடன் ஒழலை கிராமத்தில் தங்கியிருந்து பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் சங்கீதாவின் தாயார் ராதா இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து சங்கீதா, ராதாவின் அக்காள் சிப்காட்டை அடுத்த அக்ராவரம் பகுதியை சேர்ந்த ராணியுடன் ஒழலை கிராமத்தில் தங்கிப் படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளஸ்-1 தேர்வு முடிந்து விட்ட நிலையில் சகோதரர் நவீன்குமார் தனது தங்கை சங்கீதாவை தமிழ்ப்புத்தாண்டு அன்று தாழனூரில் உள்ள தந்தை டீக்காராமன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

இதற்கிடையில் கடந்த 16-ந் தேதி சங்கீதா, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்காக ஆதார் அட்டை தேவைப்படுவதாகவும் அதை எடுத்து வருவதற்காகவும் ஒழலை கிராமத்திற்கு வந்தார். அதன்பின்னர் அவர் தாழனூர் கிராமத்திற்கு திரும்பவில்லை.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை நவீன்குமார் ஒழலையில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு தங்கை சங்கீதா, வீட்டுக்குள் கட்டிலின் அடியில் துணிகள் கிழிந்த நிலையில் அலங்கோலமாக கழுத்து நெரிக்கப்பட்டு, வளையல்கள் உடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கே.வேளூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் ரஞ்சித் என்ற புருசோத்தமனுக்கும் (23) மாணவி சங்கீதாவுக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. ரஞ்சித் டிப்ளமோ முடித்துள்ளார். இதனையடுத்து ரஞ்சித்தை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 16-ந் தேதி மாலை சங்கீதா, தனக்கு போன் செய்து ஒழலையில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார்.

வீட்டிற்கு நேரில் சென்ற ரஞ்சித்திடம், சங்கீதா தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சங்கீதாவின் நடத்தையில் ரஞ்சித்திற்கு சந்தேகம் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து கேட்டபோது வாக்குவாதம் அதிகரித்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், சங்கீதாவின் செல்போன் சார்ஜர் வயரை எடுத்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் மாணவியின் செல்போனை எடுத்து கொண்டு தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வாலிபர் ரஞ்சித்தை போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மாணவியின் உடல் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வருவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது. அதன்பின்னரே இந்த கொலையில் மேலும் தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்