ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்து உள்ளனர்

மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து உள்ளனர் என்று நடிகர் அருண்விஜய் கூறினார்.

Update: 2018-04-20 22:30 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று நடிகர் அருண்விஜய் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்தார். காலை 10 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நான் அடிக்கடி வருவேன். இந்த கோவிலுக்கு வரும் போதெல்லாம் கோவில் யானை ருக்குவிடம் ஆசிர்வாதம் வாங்குவேன். இப்போது அந்த யானை இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘தடம்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இதையடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் ‘செக்க சிவந்தவானம்’ படத்தில் நடிக்க உள்ளேன். இதில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி ஆகியோர் நடிக்கின்றனர். சாகோ என்று இந்தி, தெலுங்குவில் உருவாக உள்ள படத்தில் பாகுபலி பிரபாசுடன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளேன்.

ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்து உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இது சந்தோஷமான விஷயம். இதனால் நலிந்த நடிகர்கள் பயன் பெறுவார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்