விருகம்பாக்கத்தில் தொழில் அதிபர் கவனத்தை திசை திருப்பி பணம் திருட்டு, 2 திருநங்கைகள் கைது

விருகம்பாக்கத்தில் ஆசீர்வாதம் செய்வதுபோல் நடித்து தொழில் அதிபரின் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச்சென்ற திருநங்கைகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-22 23:30 GMT
பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம் தனலட்சுமி நகரைச்சேர்ந்தவர் டேவிட் பால்ராஜ்(வயது 53). தொழில் அதிபர். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பணத்தை எடுத்து, பையில் வைத்துக்கொண்டு காரில் வீட்டுக்கு சென்றார்.

அப்போது விருகம்பாக்கம் குமரன் காலனி அருகே அவர் காருடன் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 2 திருநங்கைகள், டேவிட்பால்ராஜை ஆசீர்வாதம் செய்தனர். அவர் காரில் வைத்திருந்த பணப்பையையும் ஆசீர்வாதம் செய்து தருவதாக கூறினர்.

அதை நம்பி அவரும் பணப்பையை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அப்போது அவரது கவனத்தை திசை திருப்பிய திருநங்கைகள், டேவிட் பால்ராஜூக்கு ஆசீர்வாதம் செய்வது போல் நடித்து நைசாக பையில் இருந்த ஒரு பணக்கட்டை திருடிச்சென்று விட்டனர்.

அதன்பிறகு பையை திறந்து பார்த்த அவர், அதில் ரூ.60 ஆயிரம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்து திருநங்கைகள் இருவரையும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விருகம்பாக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்துசென்ற இரண்டு திருநங்கைகளை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள்தான், தொழில் அதிபர் டேவிட் பால்ராஜிடம் இருந்து பணத்தை திருடியது தெரிந்தது.

இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர்கள், சூளைமேட்டை சேர்ந்த சுமித்ரா(20), புளியந்தோப்பை சேர்ந்த சல்மா என்ற அலீனா(24) என்பது தெரிந்தது. சம்பவத்தன்று வங்கியில் இருந்து டேவிட் பால்ராஜ் பணம் எடுப்பதை நோட்டமிட்டனர். பின்னர் அவரை பின்தொடர்ந்து சென்று ஆசீர்வாதம் செய்வதுபோல் நடித்து அவரது கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை கைப்பற்றினர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்