எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது - குமரகுரு எம்.எல்.ஏ. பேட்டி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் மூலம் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது என்று குமரகுரு எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2018-04-24 22:30 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, மணம்பூண்டி ஆகிய இடங்களில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

ஆட்சியையும், அதிகாரத்தையும் பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க. வினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மக்கள் பணி என்பது அவர்களது நோக்கம் அல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் பணியை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போது இருந்தே தொடங்கிவிட்டார். இது புரியாமல் அனைத்து கட்சி கூட்டம், போராட்டம் என்றவுடன் மக்களிடம் செல்வாக்கு இல்லாதவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு பின்னால் ஓடிப்போய் நிற்கின்றனர். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அளவுக்குகூட தி.மு.க. வினர் வரும் தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை. இதனை காலம் உணர்த்தும்.

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழியில் ஆளும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கான அனைத்து தேவைகளையும், நாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டுவருவதால் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது. எனவே மக்கள் அ.தி.மு.க. அரசையே விரும்புகின்றனர்.

தமிழகத்தில் அமைதியான சூழல் நிலவுகின்றது. இதை கெடுக்கவேண்டும் என்பது மட்டும் தான் தி.மு.க.வின் நோக்கம். அ.தி.மு.க.வுக்கு எதிராக எத்தனை கட்சியை கூட்டணிக்கு சேர்த்தாலும் மீண்டும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர்கூறினார்.

நிகழ்ச்சியில் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் ஏ.பி.பழனி, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், நில வள வங்கியின் தலைவருமான சி.ஆர்.பார்த்தசாரதி, மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிச்சாமி, நகர செயலாளர்கள் கே.சுப்பு, என்.தங்கவேல் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்