மலேரியாவை அறவே ஒழிப்போம்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ம் நாள் ‘மலேரியா ஒழிப்பு தினமாக’ அறிவிக்கப்பட்டு, உலகமெங்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Update: 2018-04-25 11:10 GMT
 நம் அனைவருக்கும் மலேரியா என்றால் நினைவுக்கு வருவது கொசுக்கள்தான்.

மலேரியா என்ற நோயினை கொசுக்கள் பரப்புகின்றது என்றாலும் பிளாஸ்மோடியம் என்ற கிருமியினால் தான் மலேரியா மக்களை தாக்குகிறது. பிளாஸ்மோடியம் என்ற கிருமி தற்காலிகமாக மனித உடலிலும், நிரந்தரமாக கொசுக்களின் உடலிலும் இருக்கிறது. மலேரியா குறித்த சில விஞ்ஞான புள்ளிவிவரங்களை பார்க்கலாம்.

கடந்த 15 ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்குதல் தமிழகத்தில் சுமார் 60 சதவீதத்துக்கும் மேலாக குறைந்துள்ளது. 2013-ம் ஆண்டில் சுமார் 15 ஆயிரம் நபர்கள் மட்டுமே மலேரியா காய்ச்சலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு இருந்தனர். 2014-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், தமிழகத்தில் சுமார் 80 சதவீதம் மலேரியா காய்ச்சல் குறைந்துள்ளது என்று அறிவித்தது.

இது நமக்கு ஆறுதல் அளித்தாலும் மீதமுள்ள 20 சதவீத மலேரியா பாதிப்பை எதிர்கொள்ள மலேரியா காய்ச்சலின் பின்னணி என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

மலேரியா காய்ச்சலுக்கு காரணமாக இருக்கும் பிளாஸ்மோடியம் கிருமிகள் மனித உடலிலும், கொசுக்களின் உடலிலும் இரண்டு வேறுபட்ட மாற்றத்துடன் தங்களது வாழ்க்கை சுழற்சியை அமைக்கின்றன. மனித உடலில் அனபோலிஸ் என்கிற வகையை சேர்ந்த கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சும்போது கொசுக்களின் எச்சில் சுரப்பிகளின் வழியாக பிளாஸ்மோடியம் உருவாக காரணமான இருக்கும் ஸ்போரோசைட்களை மனித உடலில் செலுத்துகின்றன.

மனித உடலில் இப்படி செலுத்தப்படும் ஸ்போரோசைட்கள் கல்லீரலில் தங்கி வளர்ச்சி பெற்று ரத்தத்திலும், சிவப்பு அணுக்களிலும் ஊடுருவுகின்றன. ஸ்போரோசைட் என்பது சுமார் நாற்பதாயிரம் முதல் அறுபதாயிரம் பிளாஸ்மோடியம்களாக வளர்ச்சி பெறுகிறது. இந்த கிருமிகள் கல்லீரலிலும், ரத்த சிவப்பு அணுக்களிலும் இருக்கின்றபோது மனிதனுக்கு மலேரியா காய்ச்சலை உண்டு பண்ணுகின்றன.

மனிதனை கொசுக்கள் கடிக்கும்போது கொசுக்கள் உறிஞ்சும் ரத்தத்தின் வழியாக நோய் பரப்பும் கிருமிகள் கொசுக்களின் உடலுக்கு செல்கின்றன. அடுத்த முறை வேறு மனிதனை கடிக்கும் போது அந்த மனிதனுக்கும் மலேரியாவை கொசுக்கள் பரப்புகின்றன. ஆக, மனித உடலிலும், கொசுக்கள் உடலிலும் வளர்ந்து பெருகும் பிளாஸ்மோடியம் கிருமிகளை பரவாமல் கட்டுப்படுத்தினால் மட்டுமே மலேரியா காய்ச்சலை ஒழிக்கமுடியும்.

மலேரியா காய்ச்சலை தடுப்பதற்கு ஒரே வழி இந்த அனபோலிஸ் வகை பெண் கொசுக்கள் வளர்வதையும், அது மனிதனை கடிப்பதையும் ஒழிக்க வேண்டும். இந்த அனபோலிஸ் கொசு வகைகள் சுத்தமான ஓடுகின்ற நீரில் இன விருத்தி செய்யக்கூடியவை. இதனால் தான் மலேரியா காய்ச்சல் மழை காலத்தில் அதிகமாக மக்களை தாக்குகின்றது. இந்த கொசு வகைகளை நாம் கட்டுபடுத்த வேண்டுமென்றால் ஓடுகின்ற நீரில் கொசுக்களை கொல்ல கூடிய டி.டி.டி. மற்றும் இதர பூச்சி கொல்லிகளை நீரில் கலந்திட வேண்டும்.

இவ்வாறு கலக்கின்ற போது இந்த கொசுக்களை அழிப்பதுடன், கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடை செய்ய முடியும். கொசுக்களை இப்படி தடை செய்தாலும் மனிதன் தன்னை பாதுகாத்து கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் முந்தைய காலத்தில் இருந்தே கொசு வலைக்குள் உறங்குவதை பழக்கமாக வைத்து இருந்தனர். இருப்பினும், இந்த அவசர வாழ்க்கை மாற்றத்தால் வீட்டில் இருக்கின்ற கொசுக்களை அழிப்பதற்கு பல வகையான காற்றில் பரவ கூடிய கொசு விரட்டிகளை நாம் பயன்படுத்துகிறோம். அதே போல் மனிதனின் தோலின் மீது தடவக்கூடிய திரவங்களும் பயன்பாட்டிலுள்ளன.

இந்த பிளாஸ்மோடியம் வகை கொசுக்களில் மூன்று முக்கிய வகைகள் இருப்பினும், பால்சிபாராம் மட்டுமே மனிதனை மிகவும் அபாயகரமான கட்டத்துக்கு கொண்டு செல்ல கூடிய தன்மை வாய்ந்த பிளாஸ்மோடியம்களாக இருக்கின்றன. சிறு குழந்தைகளை இது தாக்குகின்றபோது மூளை காய்ச்சல், நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. குழந்தைகளை கொசுக்கள் கடிக்காமல் இருக்க மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கை, கால் மற்றும் உடல் முழுவதும் மூட கூடிய ஆடைகளை பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும்.

காய்ச்சல் குளிருடன் இருந்தால் மலேரியா காய்ச்சல் என்பதை அனைவரும் அறிவோம். சிலருக்கு தலைவலி, வாந்தி, காய்ச்சல், வயிற்று போக்கும் இருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மலேரியா காய்ச்சலை 100 சதவீதம் கண்டறியக்கூடிய எம்.பி.கியூ.பி.சி. போன்ற ரத்த பரிசோதனைகள் வந்துள்ளன. காய்ச்சல் அதிகமாக இருக்கின்ற போது நீர்சத்து குறைந்து காணப்பட்டால் அதிக நீரை உட்கொள்வது அவசியம். மலேரியா காய்ச்சல் சரியானாலும் கல்லீரலில் தொடர்ந்து கிருமிகள் இருக்கும். எனவே, மேலும் 14 நாட்களுக்கு மருந்து சாப்பிடுவது அவசியம்.

நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து கொண்டு நீர் உள்ள இடங்களில் கொசுக்களை கொல்லும் பூச்சு கொல்லியை பயன்படுத்தினால் மலேரியாவை அறவே ஒழித்திடலாம்.

- மருத்துவர் தி.நா.ரவிசங்கர், முன்னாள் மாநில தலைவர், இந்திய மருத்துவ சங்கம்

மேலும் செய்திகள்