ஏழை மாணவர்களுக்கு இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள் சசிகலா புஷ்பா எம்.பி. தகவல்

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஏழை மாணவர்களுக்கு இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாக சசிகலா புஷ்பா எம்.பி. கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

Update: 2018-04-29 21:57 GMT
தூத்துக்குடி,

இந்திய ஆட்சிப்பணி தேர்வில் தமிழக அளவில் முதல் இடத்தையும், இந்திய அளவில் 27-வது இடத்தையும் வி.கீர்த்திவாசன் பிடித்தார். ஐ.ஏ.எஸ். தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் பிரதான தேர்வுக்கு டெல்லியில் உள்ள எனது கணவர் ராமசாமி நடத்தி வரும் ஐ.ஏ.எஸ். அகாடமியில்தான் கீர்த்திவாசன் பயிற்சி பெற்றார்.

இவர் தவிர எங்களது அகாடமியில் படித்த 200-க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சிப்பணி தேர்வில் சிறப்பிடங்களை பிடித்துள்ளனர். இந்திய ஆட்சிப்பணியில் தமிழக அளவில் மேலும் ஏராளமான மாணவர்களை உருவாக்கும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகளை விரைவில் தொடங்க உள்ளோம்.

முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஐ.ஏ.எஸ். படிக்க விரும்பும் ஏழை மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளோம். டெல்லியில் உள்ள சிறப்பு நிபுணர்களை கொண்டு காணொலி காட்சி மூலம் சிறப்பு வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.

அதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. ஏழை மாணவர்களின் எட்டாக்கனியாக உள்ள ஐ.ஏ.எஸ். கனவை நிறைவேற்றுவதே எங்கள் அகாடமியின் நோக்கம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்