போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு பரிசு வழங்கும் விழா

போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு பரிசு வழங்கும் விழா தூத்துக்குடியில் இன்று நடக்கிறது.

Update: 2018-05-05 22:15 GMT
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாகவும், சாலை விபத்துகளை தவிர்க்கும் விதமாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கும் சிறந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசுப்போட்டி அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 278 பேர் தங்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் ஓட்டுனர் உரிமத்தையும் காண்பித்து தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை போலீஸ் நிலையங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய இடங்களில் பதிவு செய்தனர்.

பதிவு செய்த நபர்களின் வாகனங்கள் பிப்ரவரி 16-ந் தேதி முதல் ஏப்ரல் 15-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வாகன தணிக்கைகள் மூலம் கண்காணிப்பட்டது. அப்போது சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடித்து எந்தவித வழக்குகளிலும் உட்படாதவர்கள் மற்றும் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை சரியாக கடைப்பிடித்த 50 சிறந்த வாகன ஓட்டிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு முத்துநகர் கடற்கரை பகுதியில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் கலந்து கொண்டு, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறார்.

மேலும் செய்திகள்