ஏற்காட்டில் கோடைவிழா-மலர் கண்காட்சி எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்

ஏற்காட்டில் கோடைவிழா- மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

Update: 2018-05-10 23:00 GMT
ஏற்காடு,

சேலம் மாவட்டத்தில் உள்ள ‘ஏழைகளின் ஊட்டி‘ என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான 43-வது கோடைவிழா, மலர் கண்காட்சி தொடக்க விழா ஏற்காட்டில் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அரசு முதன்மை செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

ஏற்காடு கோடை விழா-மலர் கண்காட்சி வருகிற 16-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்காடு அண்ணா பூங்காவில் 2½ லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்படுகிறது. மேலும் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி ஆகியவையும் நடைபெற உள்ளது.

அதாவது, கார்னேசன் மலர்களை கொண்டு அரசு தலைமை செயலகம் போன்ற அலங்காரம், விமான தோற்றம், டிராக்டர், வாளியில் இருந்து பூக்கள் கொட்டுதல் போன்ற வடிவம், பயணிகள் மற்றும் குழந்தைகள், செல்போனில் செல்பி எடுத்துக்கொள்ள மலர் அலங்கார வடிவமைப்பு உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படுகிறது. கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நாய்கள் கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மேலும், சுற்றுலாத்துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கோடைவிழா நடைபெறும் நாட்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி, சேலத்தில் மேம்பாலம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சேலம் வருகிறார். அவர் காரில் செல்லும் வழித்தடம் எங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடைவிழா நடக்கும் ஏற்காட்டில் சேலம் சரக டி.ஐ.ஜி.செந்தில்குமார் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் என 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கோடைவிழா தொடக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று விட்டு, நாளை இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுக்கிறார். இதைத்தொடர்ந்து அவர், 13-ந் தேதி சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.

கோடை விழாவையொட்டி ஏற்காடு செல்லும் மலைப்பாதை தூய்மைப்படுத்தப்பட்டு சாலையின் நடுவில் வெள்ளைக்கோடு மற்றும் கொண்டை ஊசி வளைவுகளில் வர்ணம் பூசும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், 20 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் தியாகிகள், புலவர்கள், கவிஞர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இதன்படி தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், தகடூர் அதியமான், வள்ளபாரி, வல்வில் ஓரி, சேரன் செங்குட்டுவன், பாண்டிய நெடுஞ்செழியன், கரிகால சோழன், அவ்வையார், கம்பர், பாரதியார், திருவள்ளுவர், கபிலர், பரணர், இளங்கோ அடிகள் ஆகியோரது பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்