காலி மதுபான பாட்டிலுடன் வந்த விவசாயி குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்துக்கு காலி மதுபான பாட்டிலுடன் விவசாயி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-10 22:45 GMT
அரக்கோணம்,

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் பாபு தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு தாசில்தார் மதிவாணன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சுமதி, துணை வேளாண்மை அலுவலர்கள் சிவக்குமார், அன்பரசு, வருவாய் ஆய்வாளர்கள் கல்யாணி, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சமரபுரி வரவேற்றார்.

கூட்டத்தில் கலந்து கொள்ள இச்சிப்புத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி காலி மதுபான பாட்டிலுடன் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் விவசாய நிலங்களில் மாலை, இரவு நேரங்களில் ‘குடிமகன்’கள் மதுபானங்களை குடித்து விட்டு போதையில் காலி பாட்டில்களை உடைத்து நிலத்தில் சிதறி போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் நிலத்தில் விவசாயம் செய்யும்போது பாட்டில்கள் கால்களில் குத்தி காயங்கள் ஏற்படுகிறது. ஆகவே மதுபானபாட்டில்கள் உடைத்து போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மதுபான கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மதுபானம் விற்பதற்கு பதிலாக மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானம் விற்றால் இது போன்ற பிரச்சினைகள் வராது என்று கூறி காலி மதுபான பாட்டிலை தாசில்தாரிடம் கொடுத்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தாசில்தார் பாபு, காலி மதுபான பாட்டிலை வாங்கி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாட்டிலை பையில் வைக்குமாறு விவசாயியிடம் கூறினார். மேலும் இந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து அரக்கோணம் தாலுகாவில் உள்ள நீர்நிலை புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இடங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வேளாண்மை துறையில் அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்த விவரங்களை அந்தந்த கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். எந்த திட்டத்தை விவசாயிகள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாத அளவில் சில விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

வண்டல் மண் எடுப்பதற்காக கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் கொடுக்கும் விண்ணப்பங்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை விவசாயிகள் தாசில்தாரிடம் வழங்கினார்கள்.

மனுவை பெற்று கொண்ட தாசில்தார் பாபு விவசாயிகளின் கோரிக்கைகளை சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் தணிகைபோளூர், இச்சிப்புத்தூர், பெருங்களத்தூர், கைனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்