சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை

குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவில்லை. அவர்கள் ஊடுருவி உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-05-11 05:12 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

வடமாநிலங்களில் இருந்து குழந்தைகளை கடத்தும் கும்பல் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு மற்றும் வாசகங்கள் பரவி வருகிறது. அது முற்றிலும் வதந்தி. பொதுமக்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம்.

இதுபோன்ற வதந்திகளை நம்பி பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு வரும் அடையாளம் தெரியாதவர்களையும், சந்தேக நபர்களையும் தாக்குவது அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்தவர்கள் அங்கிருந்த குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்ததால், அவர்களை கடத்தல் கும்பல் என்று தவறுதலாக நினைத்து கிராம மக்கள் தாக்கியதில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் இறந்துள்ளார். அவருடன் காரில் வந்த 4 பேரும் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தங்கள் பகுதிக்கு வரும் அடையாளம் தெரியாதவர்களையும், சந்தேக நபர்களையும் பற்றிய விவரங்களை அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை 100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் 96554 40092 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். ஆனால் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு பொதுமக்களே அந்த சந்தேக நபர்கள் மீது தாக்குதலில் ஈடுபடக்கூடாது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற வகையில் ‘வாட்ஸ்-அப்’ மற்றும் சமூக வலைதளங்களில் வீண் வதந்திகளை பரப்புவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுசம்பந்தமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் இருந்தும் ஆட்டோ மற்றும் வேன்களில் ஒலிப்பெருக்கியை பொருத்தி கிராமம் மற்றும் நகரங்களில் பிரசாரம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சந்தேகப்படும் நபர்களை அடிப்பது, துன்புறுத்துவது போன்ற தாக்குதலை நடத்தினால் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தார்.

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், மணல் கொள்ளையை தடுக்க ஏற்கனவே இருந்த தனிப்படை போலீசார் பற்றி சில புகார்கள் வந்ததால் அந்த தனிப்படையை முழுவதுமாக கலைத்துவிட்டோம். தற்போது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் புதியதாக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும். அதுபோல் மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் போலீசார் மீதும் துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்