நாட்டிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாகி வருகிறது - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

நாட்டிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாகி வருகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2018-05-11 22:45 GMT
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.90 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகளை மக்களுக்கு அர்ப்பணிப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவில்பட்டிக்கு வந்தார்.

இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கார் மூலம் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டிக்கு புறப்பட்டார்.

வழியில் திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதில் பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.அதைத்தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்குள்ள தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில், பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை முதல்-அமைச்சர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதா வழியில் இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் நாட்டிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாகி வருகிறது. கல்வித்துறையில் ஜெயலலிதா எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையின் காரணமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. எதையும் கேட்டு வாங்கி விடலாம். ஆனால் கல்வியை கேட்டு வாங்க முடியாது. பருவங்கள் தவறி விட்டால் உரிய கல்வியை பெற முடியாது.

ஏழை மாணவ, மாணவிகளின் நலனை பேணும் வகையில் இலவச மடிக்கணினி மற்றும் சீரூடைகள் ஜெயலலிதா வழங்கினார். இந்த திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 36 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிசையில் இருக்கும் மாணவர்கள் கூட உலக அறிவியலை பெற முடிகிறது.

விவசாயிகளின் நலன் காக்கும் அரசாகவும் இந்த அரசு திகழ்ந்து விளங்குகிறது. கிராமப்புற விவசாயிகள் தான் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள்.

நானும் ஒரு விவசாயி என்ற முறையில் விவசாயிகளின் உழைப்பை நன்றாக அறிவேன். எனவே இந்த அரசு விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக தொடர்ந்து விளங்கும். ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்