தந்தை மது குடித்து தகராறு செய்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி

ஸ்ரீவைகுண்டம் அருகே தந்தை மதுகுடித்து தகராறு செய்ததால் கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-05-11 20:30 GMT
ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் அருகே தந்தை மதுகுடித்து தகராறு செய்ததால் கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கல்லூரி மாணவர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமம் இசக்கி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அங்கப்பன். விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் சுடலைமுத்து (வயது 19), ஸ்ரீவைகுண்டம் தனியார் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

அங்கப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு, தன்னுடைய குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவில் அங்கப்பன் மது குடித்து விட்டு, தன்னுடைய குடும்பத்தினரிடம் தகராறு செய்தார். இதனால் மனமுடைந்த சுடலைமுத்து அங்குள்ள குளம் அருகில் அரளி விதையை அரைத்து தின்று உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

உடனே அவருக்கு ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சுடலைமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்