முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படைவீரர் களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Update: 2018-05-12 07:55 GMT
தர்மபுரி,

முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இளநிலை படை அலுவலர் மற்றும் அதன் தகுதிக்கு மேல் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு புத்தகப்படியாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.500-ம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.800-ம், 9 மற்றும் 10-ம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிப்பவர்களுக்கு ரூ.1,500, இளங்கலை பட்டப்படிப்பிற்கு ரூ.2,000, முதுநிலை பட்டப்படிப்பிற்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது.

முன்னாள் படைவீரர்களின் ஒரு மகளுக்கு மட்டும் திருமண நிதி உதவியாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய முன்னாள் படைவீரர் கழகம் மூலம் சுபேதார் பதவிக்கு கீழ் உள்ளவர்களின் இரு குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பு முதல் இளங்கலை பட்ட படிப்பு வரை ஒரு குழந்தைக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.24 ஆயிரம் வரை வருடாந்திர கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2 மகள்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பிளஸ்-2 வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், பி.டெக்., பி.எஸ்சி. நர்சிங், பி.எஸ்சி. விவசாயம், சட்டம், படிப்பவர்கள், பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பி.எட். எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிக்கும் முன்னாள் படைவீரர் மற்றும் விதவைகளின் ஆண் குழந்தைக்கு ரூ.24 ஆயிரமும், பெண் குழந்தைக்கு ரூ.27 ஆயிரமும் பெற்று வழங்கப்படுகிறது.

இந்த கல்வி நிதி உதவி மற்றும் திருமண நிதி உதவிகள் பெற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பிறப்பு குறித்து ராணுவ ஆவணக்காப்பகங்களில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். எனவே தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவைகள் ஆவண காப்பகம் மூலம் குழந்தைகளின் விவரங்களை பதிவு செய்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்