மிளகாய் பொடி தூவி வெற்றிலை வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் பறித்த வழக்கில் 3 பேர் கைது

மயிலாடுதுறையில், வெற்றிலை வியாபாரியின் கண்களில் மிளகாய் பொடி தூவி ரூ.2½ லட்சம் பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு வெற்றிலை மண்டியில் இருந்து வெற்றிலை எடுத்து செல்லும் ஆட்டோ டிரைவர் திட்டம் தீட்டியது போலீசாரின் விசாரணையில் வெளிவந்தது.

Update: 2018-05-12 23:00 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாச்சிமுத்து நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரசாக்(வயது 65). வெற்றிலை வியாபாரியான இவர் சம்பவத்தன்று மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில் உள்ள தனது வெற்றிலை மண்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அப்துல்ரசாக் கண்ணில் மிளகாய் பொடியை தூவி அவரிடம் இருந்த ரூ.2½ லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் மயிலாடுதுறையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்பகோணம் மெயின் ரோட்டில் சித்தர்காடு அண்ணா திருமண மண்டபம் அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் மூன்று பேரும் வெற்றிலை வியாபாரி அப்துல் ரசாக் கண்ணில் மிளகாய் பொடியை தூவி அவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்றவர்கள் என்பது தெரிய வந்தது.

வெற்றிலை வியாபாரி அப்துல்ரசாகின் வெற்றிலை மண்டியில் இருந்து மற்ற கடைகளுக்கு வெற்றிலையை எடுத்து செல்லும் ஆட்டோ டிரைவர் மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியை சேர்ந்த முகமது உசேன் மகன் அமீன் (39) என்பவர் தான் இந்த வழிப்பறி கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டி கொடுத்தது தெரிய வந்தது.

அதன்பேரில் அப்பகுதியை சேர்ந்த முகமது நசீர்(39), கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி மேலத்தெருவை சேர்ந்த நாசர்(30) ஆகிய 2 பேரும் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று, அமீன் ஏற்கனவே திட்டம் தீட்டி கொடுத்தது போன்று மிளகாய் பொடியை அப்துல் ரசாக் முகத்தில் தூவி, ரூ.2½ லட்சத்தை பறித்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீன், நசீர், நாசர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சத்தையும் போலீசார் மீட்டனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் மயிலாடுதுறை ஜூடிசிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்