நாகர்கோவிலில் வக்கீல் குமாஸ்தா வீட்டில் 40 பவுன் நகை- ரூ.1½ லட்சம் கொள்ளை

நாகர்கோவிலில், வக்கீல் குமாஸ்தா வீட்டில் 40 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள், போலீஸ் மோப்பநாய் பிடித்து விடாமல் இருக்க மிளகாய்பொடி தூவி தப்பி சென்றுள்ளனர்.

Update: 2018-05-12 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் வடிவீஸ்வரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை என்ற ரமேஷ் (வயது 45). இவருடைய மனைவி தங்கம்.

ஆறுமுகம், நாகர்கோவில் கோர்ட்டில் ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக வேலை செய்து வருகிறார். தங்கம் சுயஉதவிக்குழு தலைவியாக உள்ளார். இவர்களுக்கு, முத்துக்குமார் என்ற மகனும், மீனா என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன், ஆறுமுகம் பிள்ளையின் தந்தை ராமசாமி, தாயார் மீனாட்சி ஆகியோரும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பால் வாங்குவதற்காக மீனாட்சி வெளியே சென்றுவிட்டார். குளிப்பதற்காக, ராமசாமி வீட்டினுள் இருக்கும் குளியல் அறைக்கு சென்று விட்டார். இதனால், வீட்டின் முன்வாசல் கதவு திறந்து கிடந்தது. ஆறுமுகம் பிள்ளையும் அவருடைய குடும்பத்தினரும், வீட்டில் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.

காலை 6 மணி அளவில் குளியல் அறைக்கு செல்வதற்காக தங்கம் எழுந்து வந்தார். அப்போது, வீட்டில் பீரோ வைத்திருந்த அறை திறந்து கிடந்தது. அறையினுள் மின்விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த அவர், அறையினுள் சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் கீழே சிதறி கிடந்தன.

மேலும், பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ஆகியவை மர்மநபர்களால் கொள்ளையடித்து செல்லப்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

போலீசார், மோப்ப நாய் உதவிகொண்டு பிடித்துவிடாமல் இருப்பதற்காக, கொள்ளை நடந்த அறையில் மர்மநபர்கள் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதிகாலை நேரத்தில், அப்பகுதியில் மர்ம நபரின் நடமாட்டம் இருந்ததா? என்பது பற்றி அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது.

இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ள இந்த இடத்தில் அதிகாலை நேரம் வீடுபுகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்