ஏற்காட்டில் கோலாகலம் 2½ லட்சம் வண்ண பூக்களுடன் கோடை விழா-மலர் கண்காட்சி

‘ஏழைகளின் ஊட்டி‘ என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 2½ லட்சம் வண்ண பூக்களுடன் கோடை விழா-மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2018-05-12 22:45 GMT
ஏற்காடு,

சேலம் மாவட்டத்தில் ‘ஏழைகளின் ஊட்டி‘ என்று அழைக்கப்படும் ஏற்காடு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் கோடை சீசன் ‘களை‘ கட்டி இருக்கும். இந்த சீசனை அனுபவிக்க பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்களை மகிழ்விக்க மே மாதம் இறுதியில் கோடை விழா- மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான 43-வது கோடைவிழா-மலர் கண்காட்சி நேற்று ஏற்காடு அண்ணா பூங்காவில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன் மை செயலாளர் அபூர்வ வர்மா வரவேற்று பேசினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கோடை விழா-மலர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து தோட்டக்கலைத்துறை சார்பாக ஏற்காடு அண்ணாபூங்கா நுழைவு வாயிலில் அன்னாசி பழங்கள், மாம்பழங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, பம்பளிமாஸ், வாழைப்பூ, பாக்கு பூ மற்றும், கோக்கோ, பலாப்பழம் உள்ளிட்ட காய்கறிகள், பழங்களை கொண்டு அலங்கார நுழைவு வளைவு மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்ததை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து மலர்கண்காட்சியை பார்வையிட்டார். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் உடன் சென்று கண்காட்சியை பார்வையிட்டனர். அண்ணா பூங்கா மலர்கண்காட்சி திடலில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் 2½ லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண பூக்களுடன் பூந்தொட்டிகள் வரிசையாக, அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரம் மலர்களை கொண்டு சென்னை தலைமை செயலக கட்டிடம், சேலத்தில் புதிதாக விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதை நினைவு கூறும் வகையில் 20 ஆயிரம் ரோஜா மற்றும் கார்னேசன் மலர்களை கொண்டு விமானம், 15 ஆயிரம் கார்னேசன், ரோஜா மலர்களால் டிராக்டர் போன்ற உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவைகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தன.

மேலும் தொட்டியில் இருந்து பூக்கள் சிதறுவது போன்ற மலர் அலங்காரம், குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன்களான மோட்டு, பட்லு, சின்ஜான் உருவங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. சுற்றுலா பயணிகள் அந்த உருவங்கள் முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்போன் மூலம் ‘செல்பி‘யும் எடுத்துக்கொண்டனர்.

மலர்கண்காட்சியில் கொய்மலர்களான ஜெர்பிரா, ஆந்தூரியம், கார்னேசன், ஆர்கிட்ஸ், டெய்சி, லிமோனியம் அகபேந்தஸ், ஜினியா, மேரிகோல்டு, அல்ஸ்டோமேரியா, பேர்டு ஆப் பாரடைஸ், லில்லியம், டெல்பீனியம், ஹெலிகிரைசம் போன்ற பலவகை மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரம் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் ஏற்காடு அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்திலேயே வளர்க்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மேலும் பலவகை காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பறவை, சாமி, கோவில் உருவங்கள், சாக்லெட் மற்றும் வெண்ணெய் மூலம் பறவைகள், விலங்குகள் போன்ற வடிவங்கள் ஆகியவற்றையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கோடைவிழா- மலர்க ண்காட்சி தொடக்க விழாவில் எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், மாவட்ட கலெக்டர் ரோகிணி, எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, சித்ரா, ஜி.வெங்கடாசலம், ராஜா, சக்திவேல், மருதமுத்து, சின்னதம்பி, வெற்றிவேல், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், மாவட்ட ஊர்காவல்படை துணை கமாண்டர் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் மற்றும் அனைத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுற்றுலா பயணிகள் ஏற்காடு வந்து செல்வதற்கு வசதியாக சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. முன்னதாக ஏரிப்பகுதியில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதையை திறந்து வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் நினைவு வளைவு அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தப்பாட்டாம், ஒயிலாட்டம், மயிலாட்டாம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய நடன கலை நிகழ்ச்சிகள் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவையொட்டி கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.பாரி மேற்பார்வையில் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏற்காட்டில் கோடை விழா- மலர் கண்காட்சி வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அன்று மாலை நிறைவு விழா நடக்கிறது. 

மேலும் செய்திகள்