கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம்: எச்.ராஜா குற்றச்சாட்டு

தேவதானப்பட்டி அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்று பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டினார்.

Update: 2018-05-12 23:15 GMT
தேனி,

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் ஏற்பட்ட கலவரத்தை கண்டித்து, தேனி எஸ்.பி.ஐ. திடலில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமையராஜன் தலைமை தாங்கி பேசினார். பா.ஜ.க. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

பொம்மிநாயக்கன்பட்டியில் நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டு, வீடுகள், கடைகளை இழந்துள்ள இந்து மக்களின் மீது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்பத்தில் போலீஸ் சோதனைச்சாவடியையும், அதற்கு அருகில் இருந்த கோவிலையும் ஒரு தனிநபர் இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளார். ஆனால் அவர் மீது இப்படி வழக்குப்பதிவு செய்யவில்லை.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளது. மொத்தம் 10 பேருக்கு இதுவரை நிவாரணம் வழங்கி உள்ளார்கள். அதில் 9 பேர் முஸ்லிம்கள், ஒருவர் கிறிஸ்தவர். இந்த பிரச்சினை தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 58 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும்.

இந்துக்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்கையும் ரத்து செய்ய வேண்டும். இந்துக்களில் ஆதிகாலத்தில் சாதி பாகுபாடு கிடையாது. இடைப்பட்ட காலத்தில் மடமையால் வந்தது தான் தீண்டாமை. அதை யார் கடைபிடித்தாலும் புறந்தள்ள வேண்டும்.

பொம்மிநாயக்கன்பட்டிக்கும் சேர்த்து மோடி தான் பிரதமர். தேவைப்பட்டால், தேனி மாவட்ட நிர்வாகத்தை மத்திய அரசு நேரடியாக எடுத்துக்கொள்வதற்கும் அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இருக்கிறது

காஷ்மீர் கந்துவாவில் நடந்த சம்பவத்துக்காக குரல் கொடுத்தவர்கள், இந்த பிரச்சினைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை. இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குரல் கொடுத்த பிறகு, திருமாவளவனும் இப்போது தான் வந்துள்ளார். மதுரையில் மதமாற்றம் செய்தவர்களுக்கு எதிராக போராடிய பெண்கள் கைது செய்யப்பட்டது தவறு என்று இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்திய போது, பாதிரியார்களுக்கு ஆதரவாக வைகோ, சீமான் போன்றோர் வந்தனர்.

இப்போது பொம்மிநாயக்கன்பட்டிக்கு வைகோ ஏன் வரவில்லை? சீமான் ஏன் வரவில்லை? மு.க.ஸ்டாலின் ஏன் அறிக்கை கூட வெளியிடவில்லை? இவர்கள் எல்லாம் ‘ஆன்டி தலித்’.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்