திருவண்ணாமலை, செய்யாறில் பள்ளி வாகனங்கள் ஆய்வு கலெக்டர் பஸ் ஓட்டினார்

திருவண்ணாமலை, செய்யாறில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் குறைபாடு உடைய 25 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

Update: 2018-05-12 23:00 GMT
திருவண்ணாமலை,

கோடைகாலம் முடிந்து பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்கள் சரியான முறையில் பராமரிக் கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் தனியார் பள்ளி வாகனங்கள் முற்றிலும் பரிசோதனை செய்து தகுதிச்சான்று வழங்கிய பின்னரே இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணா மலை, ஆரணி, செய்யாறு ஆகிய 3 வட்டார போக்கு வரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 1,038 பள்ளி வாகனங்கள் உள்ளது. திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத் தின் கீழ் 607 வாகனங்கள் உள்ளது. இதில் 335 வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்டார போக்கு வரத்து அலுவலர் சவுந்தர ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு வாகனங்களில் உள்ள தீயணைப்பு கருவி குறித்து ஓட்டுனர்களுக்கு விளக்கி கூறினார். மோட்டார்வாகன ஆய்வாளர் ஸ்ரீராம் வரவேற் றார்.

கலெக்டர் பஸ் ஓட்டினார்

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டு பள்ளி வாகனங் களில் ஏறி ஆய்வு செய்தார். அப்போது அவர் வாகனங் களில் வேகக்கட்டுப் பாட்டு கருவி பொருத்தப் பட்டுள் ளதா?, அவசர கால வழி தயார் நிலையில் உள்ளதா?, தீயணைப்பான் கருவி உள்ளதா? வாகனங்களில் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது அவர் ஒரு தனியார் பள்ளி பஸ்சில் ஏறி ஆய்வு செய்த போது டிரைவர் இருக்கையில் அமர்ந்து அந்த பஸ்சை திடீரென இயக்கினார். சிறிது தூரம் அவர் பஸ்சை ஓட்டினார். இதனை அங்கு கூடி இருந்த டிரைவர்கள் மற்றும் அதிகாரிகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வாக னங்களில் பழுது உள்ளதா?, முறையாக பராமரிக்கப் படுகிறதா? என்பதற்கான இந்த ஆய்வை அவர் மேற்கொண்டார். பின்னர் அவர் டிரைவருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித் தார்.

முன்னதாக கலெக்டர் பேசியதாவது:-

விபத்தில்லா மாவட்டமாக...

திருவண்ணாமலை மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வேண் டும். டிரைவர்கள் நீங்கள் கவனமுடன் வாகனத்தை ஓட்டவேண்டும். ஏனெனில் உங்களுடைய வாகனத்தில் அமர்ந்துள்ளவர்கள் அனை வரும் குழந்தைகள். வருங்கால சாதனையாளர்கள். அவர் களை நீங்கள் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளர்கள். வீட்டில், பள்ளியில் அவர்கள் எவ்வாறு பாதுகாக்கப் படுகிறார்களோ? அதைவிட வாகனங்களில் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தங்களின் குடும்ப புகைப்படத்தை கண்ணாடி யிலோ அல்லது மீட்டர் பெட்டி அருகிலோ ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் வாகனத்தை வேகமாக ஓட்ட நினைத்தால் உங்களை நம்பி ஒரு குடும்பம் உள்ளது என்பது உங்களுக்கு ஞாபகம் வரும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

கடும் நடவடிக்கை

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், திருவண்ணாமலையில் நடந்த விபத்தில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தனது இடது கையை இழக்க நேரிட்டுள்ளது. அவருக்கு சேர வேண்டிய இழப்பீடு பெற்று தரப்படும். மேலும் கோடை காலங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்திய அந்த பள்ளிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது. மேலும் கோடை காலங்களில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நேற்று நடந்த ஆய்வில் 12 வாகனங்களில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சரி செய்து வருகிற 31-ந் தேதிக்குள் மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.

செய்யாறு

செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் ராமரத்தினம், செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி உள்ளிட்ட குழுவினர் பள்ளி வாகனங் களை நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வில் இருக்கைகள் சரியான இடைவெளியில் பொருத்தியுள்ளதா, அவரச வழி திறக்கும் நிலையில் உள்ளதா, மருத்துவ முதலுதவி உபகரணங்கள், மருந்துகள் உள்ளனவா மற்றும் தீயணைப்பு கருவி உள்ளதா? உள்ளிட்டவை சரிபார்த் தனர்.

33 தனியார் பள்ளிகளை சேர்ந்த 124 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 13 வாகனங்களில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டது.

பள்ளி வாகனங்கள் அனைத்தும் வருகிற 31-ந் தேதிக்குள் ஆய்வு செய்யப்பட்டு தகுதிச்சான்று வழங்கப்படும். தகுதி சான்று பெறாத பள்ளி வாகனங்கள் இயக்கினால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்