பழனி முருகன் கோவில் சிலை மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

பழனி முருகன் கோவில் சிலை மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2018-05-14 23:00 GMT
கும்பகோணம்,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில் மூலவர் தண்டாயுதபாணி சிலை நவபாஷாணத்தால் ஆனது. இந்த சிலை சேதம் அடைந்திருப்பதாக கூறி புதிய சிலையை தங்கத்தில் வடிவமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி புதிய சிலையை காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை சேர்ந்த முத்தையா ஸ்தபதி(வயது77) என்பவர் வடிவமைத்தார்.

புதிய சிலையை வடிவமைத்ததில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கும்பகோணத்தை சேர்ந்த வக்கீல் யானை ராஜேந்திரன், போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிலை மோசடியில் முத்தையா ஸ்தபதி, பழனி முருகன் கோவிலில் செயல் அதிகாரியாக இருந்த கே.கே.ராஜா(66) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து முத்தையா ஸ்தபதி, கே.கே.ராஜா ஆகிய இருவரையும் கடந்த மார்ச் மாதம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் உதவி ஆணையர், பழனி பழைய ஆயக்குடி கிழக்கு தெருவை சேர்ந்த புகழேந்தி (60), சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த தங்க நகைகள் சரிபார்ப்பு முன்னாள் அலுவலர் தேவேந்திரன்(67) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இருவரையும் வருகிற 28-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்