கிராம பஞ்சாயத்து குழுவினரை சந்தியுங்கள் அதிகாரிகளுக்கு, கவர்னர் கிரண்பெடி அறிவுரை

கிராம பஞ்சாயத்து குழுவினரை சந்தித்து பேசுங்கள் என்று அதிகாரிகளிடம் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.

Update: 2018-05-14 22:45 GMT

புதுச்சேரி,

கிராமப்புற மேம்பாடு தொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டத்தை கவர்னர் கிரண்பெடி கவர்னர் மாளிகையில் நடத்தினார். இந்த கூட்டத்தில் இயக்குனர்கள் மலர்க்கண்ணன், ருத்ரகவுடு மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், பொதுப்பணித்துறை, மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி பேசும்போது, வளமான புதுச்சேரி என்ற நோக்கத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உள்ளாட்சித்துறையின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு கலந்துரையாடல் நடப்பதாக தெரிவித்தார். மேலும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் அரசின் பல்வேறு திட்டங்கள், அதிலுள்ள சவால்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், தங்களது செயல்பாட்டின்போது ஊழியர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கவேண்டும், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கிராமத்தில் கிராம பஞ்சாயத்து குழுக்களை சேர்ந்தவர்களை சந்தித்து பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து அரசின் திட்டங்கள் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இயக்குனர் ருத்ரகவுடு விளக்கினார்.

மேலும் செய்திகள்