நியூட்ரினோ திட்டத்தை கைவிட கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

நியூட்ரினோ திட்டத்தை கைவிட கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைந்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஒரு பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-15 00:00 GMT
கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மீத்தேன், நியூட்ரினோ திட்டங்களை கைவிட கோரியும், தமிழகத்தில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்ககோரியும் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது அவர்களை போலீசார் தடுத்தனர். இதில் போலீசாருக்கும், முற்றுகையில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இதில் முற்றுகையில் ஈடுபட்ட கோவை கண்ணம்பாளையத்தை சேர்ந்த தனலட்சுமி (வயது 30) என்ற பெண் எதிர்பாராதவிதமாக மயங்கி சாலையில் விழுந்தார். இதனை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பெண் போலீஸ் ஒருவர் ஓடிவந்து மயங்கி விழுந்த தனலட்சுமி முகத்தில் தண்ணீரை தெளித்து அவரது மயக்கத்தை தெளிவித்தார்.

பின்னர் அவரை முதலுதவி சிகிச்சைக்காக போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைதுசெய்து கோவையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர். 

மேலும் செய்திகள்