திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நிழற்குடை, இருக்கைகள் சேதம், பயணிகள் அவதி

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நிழற்குடை, இருக்கைகள் சேதமாகியுள்ளன. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2018-05-15 23:14 GMT
திருப்பூர்,

திருப்பூர் பழைய பஸ் நிலையம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. பின்னலாடை நகரான இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்து செல்கிறார்கள். பெரும்பாலும் பஸ் போக்குவரத்தை தொழிலாளர்கள் நம்பியுள்ளனர். இதன்காரணமாக காலை, மாலை நேரங்களில் பழைய பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த பஸ் நிலையத்தின் உள்பகுதியில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் இல்லை.

குறிப்பாக கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிழற்குடையின் மேல்பகுதி பலத்த காற்றுக்கு சேதமடைந்துள்ளது. இதனால் நிழற்குடையில் வெயிலுக்கு ஒதுங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோல் பஸ் நிலையத்துக்குள் உள்ள இருக்கைகள் பெரும்பாலும் சேதமடைந்து காணப்படுகின்றன. உடைந்த இருக்கையில் பயணிகள் அமர முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மேலும் பஸ் நிலையத்துக்குள் உள்ள பள்ளத்தில் வாகனங்கள் இறங்கி விடாதவாறு தடுப்பதற்காக சிமெண்ட் தடுப்பு தூண்கள் வரிசையாக அமைக்கப்பட்டு இருந்தன. அந்த தூண்களும் உடைந்து சேதமாகி கிடக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான நிழற்குடை வசதி, இருக்கை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். சிமெண்ட் தடுப்பு தூண்களை சீரமைத்து வாகனங்கள் விபத்தில் சிக்காமல் காக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்