அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம், 5 பேர் கைது

திருமுடிவாக்கத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது. சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-05-15 23:17 GMT
பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் மார்பளவு கொண்ட அம்பேத்கர் சிலையை அம்பேத்கர் பொதுநல மன்றம் சார்பில் கடந்த மாதம் வைக்கப்பட்டது. மேலு,ம் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிலையை வைக்கக்கூடாது அதனை அகற்ற வேண்டும் என்று குன்றத்தூர் வருவாய் ஆய்வாளர் இந்திராணி சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து இருந்தார்.

மேலும் அந்த சிலை இதுவரை அகற்றாததால் பல்லாவரம் தாசில்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று அதிகாலை பல்லாவரம் தாசில்தார் தலைமையில் போரூர் உதவி கமிஷனர் கண்ணன், குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் வந்த போலீசார் பீடம் அமைத்து வைக்கப்பட்டிருந்த மார்பளவு கொண்ட அம்பேத்கர் சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்ததும் சிலை வைத்தவர்கள் அங்கு ஒன்று திரண்டு அம்பேத்கர் சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருபாதம் (வயது 28), கார்த்திக்(27), அஜித்குமார் (25), விவேக் (24), பூமணி (22) ஆகியோரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை பல்லாவரம் தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும் அனுமதியின்றி அரசு நிலத்தில் சிலை வைத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்