கூடலூர் அரசு பள்ளியில் தீ விபத்து; புத்தகங்கள் எரிந்து நாசம்

கூடலூர் அரசு பள்ளியில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் புத்தகங்கள் எரிந்து நாசமானது. இது குறித்து கல்வி அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-05-15 23:23 GMT
கூடலூர்,

கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. தற்போது பள்ளிக்கூடம் விடுமுறை தினம் என்பதால் அனைத்து வகுப்பறைகளும் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அறையில் பழைய புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பள்ளிக்கூடத்தில் பழைய புத்தகங்கள் உள்ள அறையில் இருந்து புகை வெளியேறியது.

அப்போது புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்து பணியாளர்கள் ஓய்வு அறையில் தங்கி இருந்த டிரைவர், நடத்துனர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அறையின் உள்ளே பயங்கர தீ பரவியது தெரிய வந்தது. உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும் கூடலூர் தீயணைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பலத்த மழையும் பெய்தது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாது தீயணைப்பு படையினர் அறைக்கதவை திறந்து தீயை அணைத்தனர். சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதுமாக அணைந்தது. திடீர் தீ விபத்தால் ஏராளமான பழைய புத்தகங்கள், 2 சைக்கிள்கள்கருகியது. இது குறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சரஸ்வதி கூடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு யாரேனும் தீ வைத்து விட்டு தப்பி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் கோவையில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரே தீ விபத்துக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பள்ளிக்கூட அறையில் தீ பரவிய சம்பவம் குறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சிவக்குமார், உதவி தொடக்க கல்வி அலுவலர் ஐரீன்ஜெயராணி மற்றும் வருவாய் துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து கூடலூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஐரீன்ஜெயராணி கூறியதாவது:-

பழைய பொருட்கள் மற்றும் புத்தகங்களை வைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எவ்வாறு தீ பரவியது என தெரிய வில்லை. இதனால் போலீசார், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்தில் பழைய பாட புத்தகங்கள் மற்றும் தளவாட பொருட்கள் எரிந்துள்ளது. புதிய பாட புத்தகங்கள் பாதுகாப்பாக மற்றொரு அறையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்