துபாயில் இறந்த தொழிலாளிக்குரிய இழப்பீடு தொகை ரூ.35 லட்சத்தை பெற்றோருக்கு கொடுக்காமல் மோசடி, வாலிபர் கைது

துபாயில் இறந்த தொழிலாளிக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை ரூ.35 லட்சத்தை அவரது பெற்றோரிடம் கொடுக்காமல் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-05-15 23:23 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே காரனூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன் அய்யம்பெருமாள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த 2008-ல் பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக திடீரென இறந்து விட்டார். அப்போது துபாயில் அய்யம்பெருமாளுடன் வேலை பார்த்து வந்த சங்கராபுரம் தாலுகா கடுவனூரை சேர்ந்த அய்யனார் மகன் பவுன்குமார் (36) என்பவர், அய்யம்பெருமாளின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் இறந்த சம்பவம் பற்றி தெரிவித்தார்.

மேலும் அய்யம்பெருமாளின் உடலை துபாய் நிறுவனத்தின் உதவியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக கூறினார். ஆனால் அய்யம்பெருமாளின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்காமல் அங்கேயே தகனம் செய்துவிட்டு அவரது அஸ்தியை மட்டும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இதை வைத்து அய்யம்பெருமாளின் பெற்றோர் ஈமச்சடங்கு செய்தனர்.

பின்னர் அய்யம்பெருமாளின் தந்தை சின்னத்தம்பி, பவுன்குமாரை தொடர்பு கொண்டு தனது மகன் பணிபுரிந்து வந்த நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீட்டு தொகையை பெற்றுத்தரும்படி கேட்டார். அதற்காக சின்னத்தம்பி, ஒரு மனுவையும் தபால் மூலம் பவுன்குமாருக்கு அனுப்பி வைத்தார்.

இதன் மூலம் பவுன்குமார், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சென்று இழப்பீட்டு தொகையாக ரூ.35 லட்சத்தை பெற்றார். ஆனால் இந்த தொகையை அய்யம்பெருமாளின் பெற்றோருக்கு கொடுக் காமல் பவுன்குமார் மோசடி செய்து விட்டாராம். இழப்பீட்டு தொகையை தரும்படி பவுன்குமாரிடம் சின்னத்தம்பி கேட்டதற்கு பணத்தை கொடுக்க மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சின்னத்தம்பி, இதுபற்றி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் பவுன்குமார் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், அண்ணாத்துரை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் துபாயில் இருந்து கடுவனூருக்கு பவுன்குமார் வந்ததை அறிந்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கடுவனூருக்கு விரைந்து சென்று பவுன்குமாரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கள்ளக்குறிச்சி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்