ரெங்கமலையில் நில அறிவியல் துறையினர் ஆய்வு? மல்லீஸ்வரன் கோவில் சேதமடைந்ததால் பரபரப்பு

ரெங்கமலையில் நில அறிவியல் துறையினர் ஆய்வு செய்ததால் மல்லீஸ்வரன் கோவில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Update: 2018-05-15 23:43 GMT
வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தேவிநாயக்கன்பட்டி அருகே உள்ள கருமலை, ரெங்கமலை பகுதியில் பூமிக்கடியில் உள்ள பாறைகளில் தங்கம், செம்பு, காப்பர், துத்தநாகம், காரீயம் உள்ளிட்ட 7 வகையான கனிம வளங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய நில அறிவியல் துறை அதிகாரிகள் 2 குழுக்களாக முகாமிட்டு கடந்த மார்ச் மாதம் ஆய்வு நடத்தினர்.

இதற்காக கருமலை முதல் ரெங்கமலை வரை 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலையை சுற்றி ஆய்வு நடத்தினர். பின்னர் 2 மலைகளுக்கும் இடையே உள்ள பட்டா நிலங்களில் பாறை ஓட்டத்தின் அடையாளத்தை குறிக்கும் வகையில் 500 மீட்டருக்கு ஒரு அடையாள கல் ஊன்றினர்.

இதைத்தொடர்ந்து கல் ஊன்றப்பட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வு நடத்த போவதாக தகவல் பரவியது. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து ஆய்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மலைப்பகுதியில் உள்ள கற்களை மட்டும் அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். அதன்பிறகு ஆய்வு நடத்தப்படவில்லை. அதன்பிறகு ரெங்கமலையை சுற்றி குட்டி விமானம் அடிக்கடி பறந்து வந்தது. மேலும் அவ்வப்போது ஆய்வு நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி காலை 8 மணிக்கு இருமுறை வெடி வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. இந்த சத்தத்தால் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தின் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. மேலும் வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கியது. நில அதிர்வு ஏற்பட்டது போல இருந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆனால் அந்த சத்தம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது என்பது? குறித்து இதுவரை தெளிவுப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர், ரெங்கமலையில் உள்ள மல்லீஸ்வரன் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவில் கோபுரத்தின் கலசத்தை சுற்றி சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும் இருப்பதையும், கட்டிடம் சேதமடைந்து இருப்பதையும் கண்டு பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த மாதம் 28-ந் தேதி பயங்கர சத்தம் வந்தபோது, கோபுரத்தின் மீது ஏறி பார்க்கவில்லை. இந்நிலையில் 18 நாட்களுக்கு பிறகு கோவில் கோபுரம் சேதமடைந்திருப்பது தெரியவந்ததால் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தம் கேட்ட அன்று நிலஅறிவியல் துறையினர் அங்கு மலையை குடைந்து ஆய்வு செய்திருக்கலாம் என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவில் சேதமடைந்திருக்ககூடும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்களின் அச்சத்தை போக்க ரெங்கமலையில் என்ன நடக்கிறது என்பதை திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகத்தினர் மலை மீது சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்