5 பாடங்களில் தோல்வி: பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

5 பாடங்களில் தோல்வி அடைந்த பிளஸ்- 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் மண்எண்ணெய் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-05-17 22:15 GMT
கூடலூர்

தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் தோல்வி அடையும் மாணவ- மாணவிகள் துவண்டு போக வேண்டாம். தோல்வி அடைந்த மாணவ- மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை தமிழக அரசு தொடங்கியது. மேலும் தோல்வி அடைந்த பாடங்களுக்கு வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-2 முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் கூடலூர் ஏழுமுறம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகள் சந்தியா (வயது 17) பிளஸ்-2 தேர்வில் 5 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனம் வருத்தம் அடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சுல்தான்பத்தேரி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி சந்தியா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதேபோல் கூடலூர் மாக்கமூலா பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகள் சுமித்ரா (வயது: 17). இவர் பிளஸ்-2 தேர்வில் 710 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மனம் உடைந்த சுமித்ரா மண்எண்ணெய் குடித்து மயங்கி கிடந்தார்.

இதை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமித்ராவை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்