20 அம்ச கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-05-17 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் 20 அம்ச கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் டாக்டர் கண்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முதுநிலை பட்டப்படிப்புக்கான இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு டாக்டர்கள் பயனடையும் வகையில் உரிய சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும்.

அரசு டாக்டர்களுக்கு முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தனி சட்டத்தை வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்களிக்க ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நபர் குழு மூலமாக, தமிழக அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமும், நிர்வாக படி மற்றும் பிற ஊதியப்படிகளை வழங்கவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

அரியலூர் பஸ் நிலையம் எதிரே கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் டாக்டர் இந்துமதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கிராமப்புறங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு மேற்படிப்பில் வழங்கப்பட்ட 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதில் விஜயகாந்த், விக்னேஷ், புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்