கொலை வழக்கு கைதிகள் 3 பேர் கைது 6 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினர்

ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த கொலை வழக்கு கைதிகள் 3 பேரை 6 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-18 00:00 GMT
பூந்தமல்லி,

மதுரவாயலை அடுத்த நெற்குன்றம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் கடந்த 2009-ம் ஆண்டு மது அருந்தி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 28), சுதாகர் (34) ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர், தனது நண்பர்களான கன்னியாகுமரியை சேர்ந்த நாகராஜ் (39), முத்துராஜ் (36), விஜயகுமார் (49) உள்பட 4 பேருடன் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்.

இதில் தலையில் படுகாயம் அடைந்த மணிகண்டன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகர் உள்பட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை நடைபெறும்போதே சுதாகர் இறந்துவிட்டார். மற்ற 4 பேரும் கடந்த 2012-ம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர்.

ஆனால் அதன்பிறகு அவர் கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டனர். மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் கன்னியா குமரியில் பதுங்கி இருந்த கொலை வழக்கு கைதிகளான நாகராஜ், முத்துராஜ், விஜய குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

கைதான நாகராஜ், முத்துராஜ், விஜயகுமார் 3 பேரும் அண்ணன், தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்