திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி, டிரைவர் கைது

திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-05-18 22:27 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் இருந்து லாரிகளில் மணல் கொள்ளையடிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது பற்றி அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மணல் கடத்தலை தடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி திருக்கோவிலூரில் மணல் கடத்துபவர்களை போலீசார் கைது செய்தும், மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்தும் வருகின்ற னர். அந்த வகையில் மணல் கடத்தலை தடுப்பதற்காக திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் ஆவியூர் கொளப்பாக்கத்தில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது வேகமாக வந்த லாரியை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், லாரியின் உரிமையாளர் ஆவியூர் கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி மகன் சிவா(வயது 35) என்பதும், டிரைவர் காட்டுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் பாலசுந்தர்(24) ஆகியோர் என்பதும், தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. போலீசார் விசாரித்துக்கொண்டிருந்தபோது 2 பேரும் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி செய்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உயிர் தப்பினார்.

இதையடுத்து டிரைவர் பாலசுந்தரை போலீசார் கைது செய்தனர். சிவா தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை தேடி வருகின்றனர். சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்