தனியார் வங்கி இன்சூரன்சு அலுவலகத்தில் தீ விபத்து

மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் வங்கி இன்சூரன்சு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2018-05-18 23:19 GMT
மதுரை,

மதுரை கே.கே.நகர் 100 அடி ரோடு, வக்பு வாரிய கல்லூரிக்கு எதிரே உள்ள கட்டிடத்தின் 2-வது மாடியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்சு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்க்கும் அலுவலக உதவியாளர் ரகீம் நேற்று காலை 8 மணிக்கு வந்து அங்கிருந்த குளிர்சாதன பெட்டியின் சுவிட்சை போட்டார். சிறிது நேரத்தில் குளிர்சாதன பெட்டியில் இருந்து புகை வரத்தொடங்கி தீப் பிடித்தது. உடனே அவர் அங்கிருந்த தீ அணைப்பான் கருவி மூலம் தீயை அணைக்க முயன்றார். ஆனால் சில நிமிடங்களில் அனைத்து குளிர்சாதன பெட்டியும் தீ பிடிக்க தொடங்கின. தீயை அணைக்க முடியாததால் அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்தார்.

பின்னர் இது குறித்து தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க தொடங்கினர். சிறிது நேரத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் அருகில் உள்ள திடீர்நகர், அனுப்பானடி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க போராடினர். அவர்களுக்கு உதவியாக மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் கொண்டு வரப்பட்டன. சுமார் 4 மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இதற்கிடையில் கதவை உடைத்து செல்வதற்கு பயன்படுத்தும் 8 கிலோ எடை கொண்ட ஏர்சிலிண்டரை தீயணைப்பு வீரர்கள் இயக்க முயன்ற போது, அதன் மேல் உள்ள மூடி கழன்று ராக்கெட் போன்று சிலிண்டர் அங்கும், இங்கும் பறந்தது. அப்போது அந்த விபத்தை படம் எடுத்துக் கொண்டிருந்த தனியார் டி.வி. கேமரா மேன், பார்வையாளர் சரவணன் உள்ளிட்ட 3 பேர் மீது அந்த சிலிண்டர் பட்டு காயம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த தீயணைப்பு வீரர் நாகராஜன் துணிச்சலாக சென்று அதனை தடுத்து நிறுத்தி பெரும் சேதத்தை தவிர்த்தார். தீ விபத்து நடந்த இடத்தில் ஏர் சிலிண்டரால் ஏற்பட்ட பரபரப்பு அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்தில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர், முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் முதல் தளத்தில் பிரபல துணிக்கடை செயல்பட்டு வருகிறது.

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் அந்த கடைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த துணி கடையிலும் விபத்து ஏற்பட்டிருந்தால் பெரிய அளவு சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும், உயர் மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. 

மேலும் செய்திகள்