துணியை நெசவுசெய்வதற்கு நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது அமைச்சர் தகவல்

துணியை நெசவுசெய்வதற்கு நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்படு கிறது என்று போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2018-05-19 22:45 GMT
கரூர்,

கரூர் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 75-வது ஆண்டு பவளவிழாவையொட்டி நேற்று கூட்டம் நடந்தது. சங்கத்தின் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பவளவிழா கல்வெட்டினை திறந்து வைத்தனர். பின்னர் தொடங்கிய கூட்டத்தில் சங்க தலைவர் அப்னா ஆர்.தனபதி வரவேற்று பேசினார். கூட்டத்தின் போது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), இ-வே பில் முறை உள்ளிட்டவற்றால் நெசவுத்தொழிலில் தற்போது உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும், அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரியும் சங்க நிர்வாகிகள் பேசினர்.

தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது கூறியதாவது:-

கைத்தறி நகரம் என பெருமைபெறும் கரூர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக இந்தியா முழுவதும் தெரியும் நகரமாக இருந்தது. அது அப்படியே வளர்ச்சியடைந்து தற்போது கரூர் நெசவுத்தொழிலின் சிறப்பு வெளிநாடுகளுக்கும் தெரிகிறது என்றால் அதற்கு நமது உழைப்பு தான் காரணம். தமிழகத்திலுள்ள வரி வருவாயில் சுமார் 75 சதவீதம் கரூர், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய மேற்குமண்டலத்தில் நடக்கும் தொழில்கள் மூலம் கிடைக்கிறது. தற்போது துணியை நெசவுசெய்வதற்கு நவீன எந்திரங்கள் மூலம் பல்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் நெசவு தொழில் பாதிப்படைந்த வேளையில், துணி தயார் செய்வதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளவும் ,இ-வே பில் என்பது சிரமமாக உள்ளது என்பதை வணிக வரித்துறை ஆணையர் மற்றும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுத்து கூறி வலியுறுத்துகிறோம். தொழில் நுட்பத்தை பற்றி தெரியாமல் கிராமங்களில் நெசவில் ஈடுபடுவோருக்கு இ-வே பில் முறையை கடைபிடிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்தும் எடுத்து கூறி இருக்கிறோம். குஜராத்தில் நடக்கும் டெக்ஸ்டைல் தொழிலுக்கும் இது போன்ற சிரமம் இருக் கிறது. அவர்கள் ஒரு அரசாணையை வெளியிட்டிருக்கிறார்கள். அதனையும் மத்தியிலும்- மாநிலத்திலும் எடுத்து கூறியுள்ளோம். மற்ற மாநிலங்களில் தொழில் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ? அதனை தமிழகத்திலும் செயல்படுத்த மும்முரமாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

குறைத்து வருகின்றனர்

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியபோது கூறியதாவது:-

கரூரில் நடக்கிற தொழில்களுக்கு உதவிகரமாக பொருட்களை எளிதில் மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல சாலைபோக்குவரத்து வசதியினை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். ஜி.எஸ்.டி. வரியினால் ஒரு மாநில அரசின் அதிகாரம் போய்விடுகிறது. தற்போது ஜி.எஸ்.டி. வரியானது சிறு, குறு வியாபாரிகள் உள்பட மக்களை பாதிப்பதை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் துணை தலைவர் ஆலம் தங்கராஜ், இணை செயலாளர் ராமசாமி, முன்னாள் தலைவர் அன்பொழி காளியப்பன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் சுரேந்தர் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்