கோவில் விழாவுக்கு வந்த 2 பேர் குளத்தில் மூழ்கி சாவு கன்னியாகுமரி அருகே பரிதாபம்

கோவில் விழாவுக்கு வந்திருந்த 2 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Update: 2018-05-19 22:15 GMT
நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது குடும்பத்தினருக்கான கோவில் கொடை விழா இன்னும் சில தினங்களில் நடக்க உள்ளது.

விழாவில் கலந்துகொள்வதற்காக முத்துக்குமாரின் உறவினர்களான புருசோத்தமன் (வயது 58) மற்றும் ராஜீவ் (38) ஆகியோர் மும்பையில் இருந்து பஞ்சலிங்கபுரத்துக்கு வந்திருந்தனர். ஆனால் இவர்களது பூர்வீகம் நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள சங்கனாபுரம் ஆகும்.

புருசோத்தமனும், ராஜீவும் நேற்று சுந்தன்பரப்பு பகுதியில் உள்ள நாச்சியார்குளத்துக்கு குளிக்க சென்றனர்.

குளத்தில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இருவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் மூழ்கினர். ஆனால், அவர்களை காப்பாற்ற அக்கம்பக்கத்தினர் முயன்றும் முடியவில்லை. இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குளத்தில் இறங்கி தேடி புருசோத்தமன், ராஜீவ் ஆகியோரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்து வந்த கன்னியாகுமரி போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோவில் விழாவுக்கு வந்திருந்த 2 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்