கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்தவரின் வீட்டு கதவை உடைத்து 69 பவுன் நகைகள் திருட்டு

செந்துறை அருகே கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்தவரின், வீட்டு கதவை உடைத்து 69 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-05-19 23:00 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா. அவரது மனைவி தில்லைநாயகி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்களும், தினேஷ் (21) என்ற ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. சின்னப்பா கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

கணவர் சிங்கப்பூரில் இருப்பதால் தில்லைநாயகி, தனது மகன் தினேசுடன் நாகல்குழி கிராமத்திலேயே 2 மாடி கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நாகல்குழி பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியை காண்பதற்கு தில்லைநாயகி வீட்டை பூட்டி விட்டு, மகன் தினேசுடன் சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் நள்ளிரவில் இருவரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு தில்லைநாயகி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, தரைத்தளத்தில் படுக்கையறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.

மேலும் பீரோவில் இருந்த 69 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்ததை அறிந்த தில்லைநாயகி கதறி அழுதார். வீட்டில் இருந்த பொருட்களும், பீரோவில் இருந்த துணிகளும் சிதறி கிடந்தன. வீட்டில் இருந்தவர்கள் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியது. இதனால் தில்லைநாயகி வீட்டில் பொதுமக்கள் குவிந்தனர். இதுகுறித்து தில்லைநாயகி இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடியும் வந்து பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, திருட்டு நடைபெற்ற வீட்டை சுற்றி ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்