வார்தா புயலின் போது சேதம்: தாம்பரம் பஸ் நிலைய மேற்கூரைகளை சீரமைப்பதில் தாமதம்

வார்தா புயலின் போது சேதமடைந்த தாம்பரம் பஸ் நிலையத்தின் மேற்கூரைகளை சீரமைக்காமல் நகராட்சி ஊழியர்கள் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் வெயிலில் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

Update: 2018-05-21 00:18 GMT
தாம்பரம்,

சென்னையின் நுழைவு வாயிலாக தாம்பரம் உள்ளது. இங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பஸ்களில் பயணம் செய்கிறார்கள். இதனால் தாம்பரம் பஸ் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும்.

இந்த நிலையில் வார்தா புயலின் போது தாம்பரம் பஸ் நிலையத்தின் மேற்கூரைகள் பலத்த சேதமடைந்தன. மேற்கூரையின் மீது இருந்த சிமெண்டு ஓடுகள் பல பெயர்ந்து விழுந்தன. மின் விளக்குகளும் சேதமடைந்தன. இதையடுத்து, தாம்பரம் பஸ் நிலையத்தில் மின் விளக்குகளை சீரமைத்த தாம்பரம் நகராட்சி, மேற்கூரைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

இதற்கிடையில், மேற்கூரையில் எஞ்சியிருந்த சில ஓடுகளும் அவ்வப்போது பலத்த காற்று வீசும்போது பெயர்ந்து கீழே விழுந்தன. இதனால் பயணிகள் கடும் அச்சத்துடனே பஸ் நிலையத்திற்கு வந்து, செல்லும் நிலை உருவானது. எனவே மேற்கூரைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பழுதடைந்த சிமெண்டு ஓடுகளை மாற்றிவிட்டு, புதிய ஓடுகளை பதிப்பதாக கூறி, மேற்கூரையின் மீது இருந்து அனைத்து ஓடுகளையும் தாம்பரம் நகராட்சி அகற்றியது.

ஆனால் அதன் பின்னர் எந்த சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது கோடை காலம் என்பதால் பஸ் நிலையத்துக்கு வரும் மக்கள் வெயிலில் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மேற்கூரைகளை சீரமைத்தால் மட்டுமே பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியும் என்ற நிலை உருவாகிவிட்டதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சீரமைப்பு பணிகளை முழு வீச்சில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக தாம்பரம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது.

தாம்பரம் பஸ் நிலையத்தில் மேற்கூரைகளின் மீது இருந்த பல ஓடுகள் கீழே விழும் நிலையில் இருந்ததால் அவை அகற்றப்பட்டன. இங்கு புதிதாக மேற்கூரைகள் அமைக்கப்பட உள்ளன.

பஸ் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் இரவில் இந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கி முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்